வன்முறை வார்த்தைகளைவிட தவக்கால மன்னிப்பு வலிமையுடையது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வன்முறை மிகுந்த பகைமையின் வார்த்தைகளைவிட தவக்கால மன்னிப்பு மிகுந்த வலிமையுடையது என தன் தவக்காலச் செய்தியில் உரைத்துள்ளார் யெருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.
போர், சுயநலம் மற்றும் வன்முறையின் காலத்தின் போது, உயிர்ப்பின் இதயமாகவும் உலகின் நம்பிக்கையாகவும் இருக்கும் இயேசுவின் சிலுவையை உற்று நோக்குமாறு தன் தவக்காலச் செய்தியில் அழைப்புவிடுத்துள்ள கர்தினால், பகைமையின் வன்முறை வார்த்தைகளும், மோதல்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுக்களும் இறைவனின் ஒப்புரவை எந்நாளும் தடுக்க முடியாது என மேலும் கூறியுள்ளார்.
இயேசுவோடு உடனிருந்து பாலைவன அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், அருள் மற்றும் மன்னிப்பின் கொடையைப் பெறுவதற்கு இத்தவக்காலத்தை ஒரு புதுப்பிக்கப்பட்ட வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என கர்தினால் பிட்சபாலா அவர்களின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
சிலுவைப் பாதையில் நாம் கற்றுக்கொள்ளும் மன்னிப்பின் அருள் வார்த்தைகளை நாம் புரிந்துகொள்வதன் வழியாகவே அமைதியின் வருங்காலத்தில் நம்பிக்கைக் கொள்ள முடியும் என தன் செய்தியில் கூறும் கர்தினால், புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கல்வாரி நோக்கிச் சென்ற பாதையில் நடைபோட்டு, ஒப்புரவின் கருவிகளாக செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்