ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் முகாம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் முகாம்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 27 விழுக்காடு
அதிகரித்துள்ளது என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பெய்த கடுமையான பருவமழை இதற்கு முக்கிய காரணம் என்றும், இதனால் இப்பெருமழைக்குப் பின்னர் நலத்தூய்மையாக்கம் (sanitary) மோசமடைந்து காலரா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவ வழிவகுத்தது என்றும் உரைக்கும் அதன் அறிக்கை, இதுமட்டுமன்றி, உணவுப்பற்றாக்குறை மற்றும் புதிய புலம்பெயர்ந்தோர் வருகையும் இதில் அடங்கும் என்றும் எடுத்துக்காட்டுகிறது.
புலம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள குழந்தைகளில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது 2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வுக்குப் பிறகு மிகவும் உயர்ந்த நிலையாகும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 2025-ஆம் ஆண்டில் 14,200 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்றும், சரியான சிகிச்சை இல்லாமல், இந்தக் குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு 11 மடங்கு அதிகம் என்றும் யுனிசெஃப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், யுனிசெஃப் நிறுவனம் ஏறக்குறைய 12,000 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது என்றும், இதில் 92 விழுக்காட்டினர் நலம் பெற்றுள்ளனர் என்றும் உரைக்கும் அதன் அறிக்கை, ஆனால் அவசரத் தலையீடு (urgent intervention) இல்லாமல் நிலைமை மோசமாகவே உள்ளது என்றதொரு கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்