MAP

தென்கொரியாவின் காட்டுத் தீ தென்கொரியாவின் காட்டுத் தீ 

தென்கொரியாவின் காட்டுத்தீ குறித்து தலத்திருஅவை கவலை

பாதிக்கப்பட்ட மக்களுக்கென இடர் நிவாரண குழுவை உருவாக்கியுள்ள தென்கொரிய மறைமாவட்டம், ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை, காட்டுத் தீயின் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு நாளாக உருவாக்கியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென்கொரியாவில் பேரழிவுக்கும் 27 பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமான காட்டுத்தீ குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான செபத்திற்கும் நிதியுதவிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளது அந்நாட்டின் Uiseong-gun தலத்திருஅவை.

தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வரும் இக்காட்டுத் தீயால் இதன் அழிவுகளை மதிப்பிடமுடியாமல் இருப்பதாக Andong மறைமாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும், தற்போது Cheongsong பேராலயத்திற்கு பின்புறமும் தீ பரவி வருவதால் அப்பகுதியின் அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள் மற்றும் பங்குதள மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளதாகவும் தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Cheongsong பேராலயத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லையெனினும், பங்குதள மக்களின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Andong மறைமாவட்ட கல்லறைத் தோட்டத்தை சுற்றியிருந்த மரங்களும் புல்வெளியும் தீக்கிரையாகியுள்ளதாக உரைக்கும் மறைமாவட்டம், Euisong பங்குதளத்தில் மட்டும் தீயால் ஏற்பட்ட இழப்பு 36,506 டாலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இடர் நிவாரண குழு ஒன்றை உருவாக்கியுள்ள மறைமாவட்டம், ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை, காட்டுத் தீயின் பாதிப்புக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2025, 15:14