திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணை மடல் பகுதி 19
மெரினா ராஜ் - வத்திக்கான்
நிலை வாழ்வை நம்புகின்றேன் என்று இதயத்தின் ஆழத்திலிருந்து நமது நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளை நாம் நமது நம்பிக்கை அறிக்கையில் எடுத்துரைக்கின்றோம். கிறிஸ்தவ நம்பிக்கையானது இவ்வார்த்தைகளில் ஓர் அடிப்படை இணைப்பைக் காண்கின்றது. ஏனெனில் நிலைவாழ்வு நமது மகிழ்ச்சி என்று இறையியல் நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கின்றன. இரண்டாம் வத்திக்கான் சங்கமும் இதனை உறுதி செய்கின்றது. சமய அடிப்படையும் எதிர்நோக்கும் நிலைவாழ்வில் இல்லாதிருக்கும்போது மனித மாண்பு மிகவும் கடுமையான முறையில் காயப்படுத்தப்படுகிறது.
வாழ்வு, மரணம், குற்ற உணர்வு, துயரம் ஆகியவற்றுக்குத் தீர்வுகள் இல்லாது, மனிதர்கள் விரக்தியில் மூழ்குகின்றனர். மறுபுறம், நம்மை மீட்ட எதிர்நோக்கின் காரணமாக, மனிதகுலத்தின் வரலாறும் நம் ஒவ்வொருவரின் வரலாறும் இருண்ட படுகுழியையோ நோக்கி ஓடாது, மாட்சிமை நிறைந்த கடவுளுடனான சந்திப்பை நோக்கிச் செல்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆகையால், அவரது மறுவருகையை எதிர்பார்த்து இருப்பதிலும், எதிர்நோக்குடன் அவரில் என்றென்றும் வாழ்வோம் என்ற உறுதியிலும் நிலைத்து இருப்போம். இந்த உணர்வோடு தொடக்க கால கிறிஸ்தவர்களின் உணர்வுப்பூர்வ அழைப்பும் திருவிவிலியத்தின் இறுதி வரிகளுமாகிய "ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!" (திருவெளிப்பாடு 22:20) என்ற உணர்வில் நிலைத்திருப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்