திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணைமடல் பகுதி 21
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறப்பை ஒருவர் எதிர்கொள்ளும்போது தனக்கு மிகவும் நெருக்கமான அன்பு உறவுகளை விட்டுப் பிரிய கட்டாயப்படுத்தப்படுகின்றார். யூபிலி ஆண்டானது திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட புதிய வாழ்க்கையின் கொடையை மிகுந்த நன்றியுடன் கண்டறிய நமக்கு வாய்ப்பளிக்கின்றது. நமது வாழ்க்கை நாடகத்தை மாற்றியமைக்கும் திறன் பெற்றதாக யூபிலி இருக்கின்றது. முதல் நூற்றாண்டில் தொடக்கத்தில் நம்பிக்கையின் மறைபொருள் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம். தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்கள் திருமுழுக்கு வழங்கும் தொட்டியை எண்கோண வடிவத்தில் கட்டினார்கள். உரோமையில் உள்ள தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் உள்ளது போன்று சிலர் இன்று வரை அதே நடைமுறையைப் பின்பற்றி வருவது பாராட்டுதற்குரியது. இயேசு உயிர்த்தெழுந்த எட்டு நாள்களுக்குப் பின் திருமுழுக்கு தொட்டிலானது திறக்கப்படுகின்றது. பாஸ்கா காலத்து எண்கிழமையை அடையாளப்படுத்தும் வகையில் எண்கோண வடிவத்தில் கட்டப்பட்டன.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து, இறைவனுக்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்த மறைசாட்சிகள் தங்கள் வாழ்வால் நம்பிக்கையின் சான்றுகளாகத் திகழ்கின்றார்கள். தங்களது வாழ்வைத் துறப்பதன் வழியாக கடவுளை மறுதலிக்காமல் வாழ்ந்தவர்கள் அவர்கள். எல்லாக் காலகட்டத்திலும் இவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. அவர்களது சான்றுவாழ்வைப் பாதுகாப்பதன் வழியாக நாம் நமது எதிர்நோக்கைக் காத்துக்கொள்ள முடியும். தங்களது இரத்தத்தின் வழியாக கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்தும் மறைசாட்சிகள் நம்பிக்கையின் விதைகளாகத் திகழ்கின்றனர். பல்வேறு கிறிஸ்தவ மரபுகளைச் சார்ந்த பாரம்பரியத்திலும் காணப்படும் இம்மறைசாட்சிகளின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் கிறிஸ்தவ கொண்டாட்டம் இந்த யூபிலி நாள்களில் இருக்கவேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்