MAP

ஒரு பள்ளியில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்தோர் ஒரு பள்ளியில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்தோர்  

காங்கோவில் இராணுவ நடவடிக்கை தீர்வாகாது!

“இராணுவத் தீர்வுகளை விட, பேச்சுவார்த்தையே அமைதியை அடைவதற்கு முக்கியமான வழி. ஏனெனில் போர் இப்பகுதியில் வறுமையையும் துன்பத்தையும் அதிகப்படுத்துகிறது” : ஆயர் Willy Ngumbi Ngengele

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் அரசுப் படைகளுக்கும் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் அங்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்று கூறியுள்ளார் கோமாவின் ஆயர் Willy Ngumbi Ngengele.

வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள ஆயர் Ngengele அவர்கள்,  அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் அங்குப் பலமுறை தோல்வியடைந்த போதிலும், ஜனவரியில் மோதல் அதிகரித்ததிலிருந்து தற்போது சிறிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

கோமா நகரம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வன்முறை இப்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்,  இதனால் கடத்தல்கள், கொலைகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் குறித்த அச்சத்தில் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு வாழ்க்கை பெருகிய முறையில் கடினமாகிவிட்டது என்றும், வங்கிகள் மூடப்பட்டு, பலர் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர் என்றும், அதேவேளையில், அரசு ஊழியர்களுக்கும் கூட சம்பளம் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் ஆயர்.

இந்தத் துயரங்களின் மத்தியிலும், தலத்திருஅவை நம்பிக்கையுடன் உள்ளது என்றும், தவக்கால வழிபாட்டு நிகழ்வுகளுக்கு மக்கள் அதிகளவில் வருகைபுரிகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர் நெங்கல் அவர்கள், அனைவருக்கும் குறிப்பாக, போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குத் தனது ஒன்றிப்பையும் உடனிருப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைதி முயற்சிகளைப் பொறுத்தவரை, அனைத்துலகத் தடைகளைக் காரணம் காட்டி, மார்ச் 18-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து M23 கிளர்ச்சியாளர்கள் விலகியதில் தனது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஆயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மார்ச் 2025, 15:41