மனித வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஓர் அழைப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டும், யூபிலி ஆண்டு 2025ஐ முன்னிட்டும் மார்ச் 8 சனிக்கிழமையன்று மனித வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைக்காக சிறப்பு செபம் மற்றும் விழிப்புணர்வு நாளாக சிறப்பிக்க உலகளாவிய செப வலையமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் தலித்தாகும் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Abby Avelino.
மார்ச் 8, சனிக்கிழமை உலகளாவிய செபம் மற்றும் விழிப்புணர்வு நாளை ஊக்குவிக்கும் இளம் தூதர்கள் மற்றும் எதிர்நோக்கின் இளம் தூதர்கள் என்னும் பன்னாட்டு வலையமைப்புக்கள் இணைந்து உலகளாவிய மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் ஒரு புதிய நடவடிக்கைக்கான அழைப்பைத் தொடங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார், துறவறத்தாரின் பன்னாட்டு அமைப்பால் நடத்தப்படும் தலித்தா கும் என்ற அமைப்பின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி அவெலினோ.
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரங்களின்படி, மனித வர்த்தகத்திற்கு ஆளானவர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதால் அகில உலக மகளிர் நாளின்போது இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி அவெலினோ.
மனித வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்திற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த குறிப்பிடத்தக்க நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அருள்சகோதரி அவெலினோ அவர்கள், உடனடி மற்றும் கூட்டு நடவடிக்கை தேவைப்படும் இந்த உலகளாவிய நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் இந்நாளை சிறப்பிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கான அழைப்பு வழியாக, அகில உலக மகளிர் தினத்திற்கான பிரச்சாரத்தில் இணைவதாகவும் மனித வர்த்தகத்துக்கு எதிராகப் போராடும் இளம் தூதர்களுடன் இணைந்து தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்துக்கொள்வதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி அவெலினோ.
2015 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறுவப்பட்ட மனித வர்த்தகத்துக்கு எதிரான நிறுவனத்தின் 11-ஆவது பன்னாட்டு செபம் மற்றும் விழிப்புணர்வு தினத்தின் இறுதியில், இளம் ஆர்வலர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு குழுவால் இந்த நடவடிக்கைக்கான அழைப்பு வரைவு செய்யப்பட்டதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி அவெலினோ.
மனித வர்த்தகத்துக்கு எதிரான இந்த அழைப்பு, உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள், அனைத்து மதங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அருள்சகோதரி அவெலினோ அவர்கள், இந்த கொடூரமான குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் ஒன்றுபட்டு உறுதியான முறையில் பங்களிக்க இது வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்