MAP

இறைவேண்டலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இறைவேண்டலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி குறித்த இந்தோனேசிய ஆயர்களின் தவக்காலச் செய்தி!

பல இந்தோனேசிய ஆயர்கள் 2025-ஆம் ஆண்டுக்கான தவக்காலச் செய்தி ஒன்றை வெளியிட்டு, அதில் சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் ஏழைகளுக்கு நீதி வழங்குவதற்கான திருத்தந்தையின் அழைப்பை ஏற்றுக்கொள்ள விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசியாவின் எண்டே திருஅவைசார் மாநிலத்தின் ஆயர்கள் (Ecclesiastical Province of Ende in Indonesia) சுற்றுச்சூழல் மாற்றம், சமூக நீதி மற்றும் நற்செய்தி விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தி 2025-ஆம் ஆண்டுக்கான தவக்காலச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐந்து முக்கிய தலைப்புகளின் கீழ் அவர்கள் தங்களின் தவக்காலச் செய்திகளை வழங்கியுள்ளனர்.

01. சுற்றுச்சூழல் அக்கறைகள்

புளோரஸ் மற்றும் லெம்பாட்டாவில் உள்ள புவிவெப்ப ஆற்றல் திட்டங்கள் குறித்துத் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ள ஆயர்கள்,  ஆற்றல் வளம் வாய்ந்த சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு மற்றும் கலாச்சார தாக்கங்கள் குறித்தும் எச்சரித்துள்ளனர்.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருங்கிணைந்த சூழலியல் அழைப்புக்கு ஏற்ப, சூரிய சக்தியை ஒரு நிலையான மாற்றாகவும் ஆயர்கள் தங்களின் இந்தக் கடிதத்தில் பரிந்துரைத்துள்ளனர்.

2. மனித வர்த்தகம்

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும் மனித வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், கல்வியை வழங்குவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் திருஅவையின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

3. குழந்தை வளர்ச்சிக் குறைபாடு

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக குழந்தை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுத்தும் பிரச்சனைக் குறித்தும் எடுத்துக்காட்டும் இந்தக் கடிதம், அதை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

4. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சவால்கள்

தாவர நோய்கள் மற்றும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் போன்ற உள்ளூர் விவசாயத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், நிலையான விவசாய நடைமுறைகளுக்கும், விவசாயிகளுக்கும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

5. சமூக நீதி

ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பின் 2025-ஆம் ஆண்டிற்கான அறிக்கையை மேற்கோள் காட்டி, படைப்பின் பாதுகாப்பு, வழுப்படத்தக்கவர்களின் பாதுகாப்பு மற்றும் மிகவும் நீதியான சமூகத்திற்கான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர் ஆயர்கள்.

இறுதியாக, தவக்காலத்தின் போது விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையிலும் சமூகங்களிலும் நற்செய்தியின் மதிப்பீடுகளை ஆழப்படுத்த இறைவேண்டல், நோன்பு மற்றும் தர்மம் செய்தலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து இந்தக் கடிதத்தை நிறைவு செய்துள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2025, 14:24