MAP

Medjugorje மரியன்னை திருத்தலம் Medjugorje மரியன்னை திருத்தலம்   (AFP or licensors)

அன்னை ஓர் அதிசயம் – Međugorje அன்னை திருத்தலம்

Medjugorjeல் அன்னைமரியா சொல்லி வருவதுபோல பாவத்திலிருந்தும் சோதனைகளிலிருந்தும் விலகியிருக்கத் தீர்மானிப்போம். உலகில் சண்டைகள் நீங்க, Medjugorje அன்னைமரியாவாகிய அமைதியின் அரசியிடம் செபிப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போஸ்னியா-ஹெர்செகொவினா நாடு, முன்னாள் யூக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த குடியரசுகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் நாடுகளில் ஒன்றாக விளங்கும் போஸ்னியா-ஹெர்செகொவினா குடியரசின் மேற்கே, குரோவேஷியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிறிய கிராமம் Međugorje ஆகும். Međugorje என்றால் "இரு மலைகளுக்கு இடையில்" என்று அர்த்தமாகும். இக்கிராமத்தில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட குரோவேஷிய இன கத்தோலிக்கரும் வாழ்கின்றனர். Međugorjeன் Crnica குன்றில் 1981ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று ஆறு சிறாருக்குப் புனித கன்னிமரியா காட்சி கொடுத்தார் என்ற செய்தி பரவியவுடன் திருப்பயணிகள் அங்கு வரத்தொடங்கினர். எனவே அச்சமயத்தில் அப்பகுதியை ஆட்சி செய்த முன்னாள் யூக்கோஸ்லாவிய கம்யூனிச அதிகாரிகள் சுறுசுறுப்பானார்கள். திருப்பயணிகள் வழங்கிய நன்கொடைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காட்சிக் குன்று என்று அழைக்கப்படும் அவ்விடத்துக்குச் செல்லும் வழிகளையும் காவல்துறை அடைத்தது. அக்கிராமப் பங்குத் தந்தை Jozo Zovko தேசியவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, 1981ம் ஆண்டு அக்டோபரில் மூன்றரை ஆண்டுகளுக்குத் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டு, கட்டாய வேலைசெய்யும் முகாமுக்கு அனுப்பப்பட்டார்.  Amnesty International அனைத்துலக மனித உரிமைகள் கழகம் உட்பட பலரின் தலையீட்டின்பேரில் யுக்கோஸ்லாவிய நீதிமன்றம், இவ்வருள்பணியாளரின் தண்டனைக் காலத்தை ஒன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது. அருள்பணியாளர் Jozo Zovko 1983ம் ஆண்டில் விடுதலைச் செய்யப்பட்டார்.

1981ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, நான்கு வயது Mirjana Dragicevicவும், ஐந்து வயது Ivanka Ivankovićம், Međugorjeல் புனித கன்னிமரியைக் காட்சியில் கண்டதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் ஆறு வயது Marija Pavlović, ஏழு வயது Jakov Colo, எட்டு வயது Vicka Ivanković, ஒன்பது வயது Ivan Dragicevic ஆகிய நால்வரும் புனித கன்னிமரியைக் காட்சியில் கண்டதாகக் கூறினார்கள். Međugorje கிராமத்தின் Podbrdo என்றழைக்கப்படும் Crnica குன்றில் இக்காட்சியைக் கண்டதாகத் தெரிவித்தனர். வெண்மை நிறத்தில் கரங்களில் குழந்தையை வைத்திருந்தவாறு அக்காட்சி இருந்தது என்றும், இது வியப்பாக இருந்ததால் அவ்விடத்தை அவர்கள் நெருங்கவில்லை என்றும் அச்சிறார் கூறியிருக்கின்றனர். அடுத்த நாள் அதே நேரத்துக்கு அந்த நால்வரும் அங்குச் சென்றனர். பின்னர் மற்ற இருவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். பல ஆண்டுகளாக இந்த ஆறுபேரும் அன்னைமரியைத் தினமும் காட்சியில் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்னைமரியும் இக்காட்சிகளில் அச்சிறாரின் வாழ்வுக்கும், அவர்களின் ஊருக்கும், உலகுக்கும் செய்திகளை வழங்கி வருவதாக அவர்கள் சொல்லி அச்செய்திகளையும் வெளி உலகுக்கு அறிவித்து வருகின்றனர். உலகில் கடவுளின் அன்பை உணராமல் இருப்பவர்களுக்காக நாம் அனைவரும் செபிக்க வேண்டுமென காட்சிகாண்பவர்களில் ஒருவரான Mirjana சொல்லியிருக்கிறார். 

Međugorjeeல் அன்னை மரியா காட்சி கொடுத்ததற்குப் பின்னர், இவ்வன்னை மரியா, "Međugorje அன்னைமரியா" என்றும், "அமைதியின் அரசி" என்றும் அழைக்கப்படுகிறார். அந்த ஆறு காட்சி காண்பவர்களில் ஒருவரான Marija என்பவர் அந்த முதல் காட்சிக்குப் பின்னர், ஒவ்வொரு மாதத்தின் 25ம் தேதியன்றும், Mirjana என்பவர் ஒவ்வொரு மாதத்தின் 2ம் தேதியன்றும் அன்னைமரியாவிடமிருந்து செய்திகளைப் பெறுகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. Međugorje அன்னையிடமிருந்து இவர்கள் பெறும் செய்திகள் உலகெங்கும் பரவி புகழ் அடைந்து வருகின்றன. அங்குச் செல்லும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. உலகில் கத்தோலிக்கருக்கு மிகவும் புகழ்பெற்ற திருப்பயண இடமாகவும், ஐரோப்பாவில் அன்னைமரியா காட்சி கொடுத்த மூன்றாவது முக்கிய திருப்பயண இடமாகவும் Međugorje மாறி வருகிறது. ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் Međugorje செல்கின்றனர். 1981ம் ஆண்டில் Međugorjeல் அன்னைமரியா காட்சி கொடுத்த பின்னர் நான்கு கோடிக்கு மேற்பட்ட திருப்பயணிகள் அங்குச் சென்றுள்ளனர் எனவும், உடல், மன ரீதியாக பலம் பெற்றுள்ளனர் எனவும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

Marija Pavlović Lunetti, Mirjana Dragicevic Soldo ஆகிய இருவருக்கும் அன்னைமரியா காட்சி கொடுப்பதாகச் சொல்லப்படும் நாள்களில் அங்குச் சென்று செபத்தில் ஈடுபடும் அன்னைமரி பக்தர்கள் பல அதிசயங்களைப் பார்ப்பதாகச் சாட்சி சொல்லியிருக்கின்றனர். அச்சமயத்தில் வானில் கதிரவன் நூல்போல் பிரிந்து தெரிவதாகவும், கதிரவன் நிறம் மாறுவதாகவும், இதயங்களும் சிலுவைகளும் கதிரவனைச் சுற்றி இருப்பதாகவும் பலருக்குத் தெரிகின்றதாம்.

Međugorjeல் சொல்லப்படும் அன்னைமரியா காட்சிகள், அவை தொடர்பான வெளிப்பாடுகள் போன்றவை குறித்து விசாரணை நடத்துவதற்குத் திருப்பீடம் 2010ம் ஆண்டில் ஆயர்கள், இறையியலாளர்கள், இன்னும் பிற வல்லுனர்களைக் கொண்ட குழுவை கர்தினால் கமிலோ ரூயினி அவர்கள் தலைமையில் ஏற்படுத்தியது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Međugorjeல் அன்னைமரியா காட்சி கொடுக்கும் சமயங்களில் பல புதுமைகள் நடைபெற்று வருகின்றன.

இத்தாலியின் பதுவை நகரைச் சேர்ந்த Silvia Busi என்ற சிறுமிக்கு நடந்த புதுமை ஒன்று 2011ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதியன்று விவரிக்கப்பட்டது. 2004ம் ஆண்டில் இச்சிறுமிக்கு 16 வயது நடந்தபோது கடின நோயால் தாக்கப்பட்டார். எல்லா வகையான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. குறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் சில நாள்களுக்குள் அச்சிறுமிக்கு கால்களை நகர்த்தவே முடியவில்லை. சக்கர நாற்காலியில் வாழ்வைத் தொடங்கினார். ஒன்பது மாதங்கள் சக்கர நாற்காலியில் அங்குமிங்கும் சென்றுவந்த சிறுமி சில்வியாவின் நோய் Međugorjeல் 2005ம் ஆண்டில் காட்சிக்குன்றில் Ivan Dragicevic என்பவருக்கு அன்னைமரியா காட்சி கொடுத்தபோது முழுவதும் குணமடைந்தது. ஆக 16 வயதில் திடீரென மாறிய சில்வியாவின் வாழ்வு 17 வயதில் மீண்டும் புத்துயிர் பெற்றது. தனக்கு நடந்ததை சில்வியாவே ஒரு செபக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சக்கர நாற்காலியில் வாழ்வு தொடங்கியதும் நானும், எனது குடும்பத்தினரும் கடும் வேதனைகளை அனுபவித்தோம். தொடர்ந்து எனது உடல் எடை குறையத் தொடங்கி வாழ்வும் மோசமாகிக் கொண்டு வந்து உணர்வுரீதியாக நான் பாதிக்கப்பட்டேன். அன்னைமரியிடம் பக்திகொண்ட ஒரு செபக்குழு என் தாயிடம் பேசி நாங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று அச்செபக்குழுவோடு சேர்ந்து செபமாலை சொல்லி வந்தோம். திருப்பலியில் பங்குகொண்டு திருநற்கருணையும் வாங்கினோம். என்னால் வீட்டில் இருக்க முடியாததால் என் பெற்றோர் சென்ற இடங்களுக்குச் சென்றேன். செபமாலை செபிக்க முதலில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் நாள் செல்லச் செல்ல அச்செபத்தைச் செபித்தபோது மனது இலேசானது. Međugorjeக்கு நான் சென்றதும், எனது நோய்போல் திடீரென நடந்ததுதான். எனக்கு மசாஜ் சிகிச்சை கொடுத்த மருத்துவர் தனது தாயோடு Međugorje போவதாகச் சொன்னார். அப்போது நானும் வரலாமா என்று கேட்டேன். பின்னர் எனது தந்தையோடு நானும் சென்றேன். அது 2005ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி. அன்னைமரியா முதல்முறையாக காட்சி கொடுத்த நினைவு நாள். Ivan Dragicevicவுக்கு அன்று மாலை அன்னைமரியா காட்சி கொடுப்பார் எனச் சொல்லப்பட்டது. அன்று இரவு 8 மணி. நானும் சக்கர நாற்காலியில் அங்கு இருந்தேன். Ivan அன்னைமரியாவைக் காட்சி கண்டபோது எனது இடதுபக்கத்தில் ஓர் ஒளியைப் பார்த்தேன். அழகாக, வெண்மை நிறத்தில் இருந்த ஒளியிலிருந்து குரலைக் கேட்டேன். அக்காட்சி நேரம் முழுவதும் எனது கண்களால் அந்த ஒளியைப் பார்த்தேன். காட்சி முடிந்ததும் என்னை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்தவர் தடுமாறினார். நான் நாற்காலியிலிருந்து கீழே பாறைத் தரையில் விழுந்தேன். ஆனால் நான் பாறையை உணரவில்லை. மாறாக, என்னில் குணமடைதல் இடம்பெற்றது. நான் மெதுவான மெத்தையில் கிடப்பதாக உணர்ந்தேன். ஓர் இனிய குரல் என்னிடம் பேசி என்னை அமைதிப்படுத்தியது. அதன்பின்னர் சில நிமிடங்கள் கழித்து எனது கண்களைத் திறந்தேன். எனது தந்தை அழுதுகொண்டிருந்தார். எனது கால்பலத்தை உணர்ந்தேன். எனது தந்தையிடம், நான் குணமாகிவிட்டேன், என்னால் நடக்க முடியும் என்று கூறினேன். விரித்த கரங்கள் என் முன்னால் இருந்தன. நான் நடக்கத் தொடங்கினேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு நானே அக்குன்றின்மீது ஏறி சிலுவைப்பாதையில் கலந்து கொண்டேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன், மருந்துகள் எதுவும் எடுப்பதில்லை. 

சில்வியா போன்று பலருக்குப் புதுமைகள் நடப்பதாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னைமரியா இக்காட்சிகளில் உலகுக்குப் பல செய்திகளைச் சொல்லி வருகிறார். அவற்றுள் ஒன்று இதோ...

“அன்புக் குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் விசுவாச வாழ்வை வாழ்ந்து ஒவ்வொரு வழியிலும் அதற்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். சிறு குழந்தைகளே, பாவத்திலிருந்தும் சோதனைகளிலிருந்தும் விலகியிருக்கத் தீர்மானியுங்கள். உங்கள் இதயங்களில் தூய வாழ்வுக்கான மகிழ்வும் அன்பும் இருக்கட்டும். சிறு குழந்தைகளே, நான் உங்களை அன்பு செய்கிறேன். உன்னதக் கடவுளின் முன்பாக உங்களுக்காகப் பரிந்துரைக்க உங்களோடு இருக்கிறேன். எனது அழைப்புக்குப் பதில் அளித்ததற்கு நன்றி”

இது போன்ற செய்திகளை இன்றும் வழங்கி வருகிறார் அன்னை மரியா. திருஅவை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியா இங்குக் காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார் என்பதை இதன்வழி அறிகிறோம்.

மெஜூகோரே குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் இல்லாத ஓர் எளிய இடமாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலர் இறைவேண்டல் செய்யவும், மனமாற்றத்தை அனுபவிக்கவும், தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தவும் வரும் ஆன்மிக மாற்றத்தின் தளமாக மாறியுள்ளது என்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அத்திருத்தலத்தின் அப்போஸ்தலிக்கப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Aldo Cavalli.

அன்பர்களே, உலகில் சண்டைகள் நீங்க, குறிப்பாக காசா மற்றும் உக்ரைனில் வன்முறை ஒழிந்து அமைதி நிலவ Medjugorje அன்னைமரியாவாகிய அமைதியின் அரசியிடம் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2025, 13:03