அன்னை ஓர் அதிசயம் – சலேத் அன்னைமரியா, பிரான்ஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே Grenobleக்கு 50 மைல் தூரத்தில் அமைந்துள்ள சிறிய ஊர் La Salette. ப்ரெஞ்ச் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள இந்த எளிய ஊரில் ஏறக்குறைய 200 பேரே வாழ்கின்றனர். இது கடல்மட்டத்தைவிட 1800 மீட்டர் உயரத்திலுள்ளது. இவ்வூரின் Sous-Les Baisses மலையில்தான் 1846ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி, Maximin Giraud, Mélanie Calvat ஆகிய இரண்டு சிறாருக்கு அன்னைமரியா காட்சி கொடுத்தார். அச்சமயம் Maximinக்கு வயது 11. Mélanieக்கு வயது 14. அன்னைமரியாவைக் காட்சியில் காண்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் இவ்விரண்டு சிறாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். Grenobleக்கு அருகிலுள்ள Corps நகரைச் சேர்ந்த Mélanie Calvat, Maximin Giraud ஆகிய இரண்டு சிறாரும் அந்நகருக்கு அருகிலுள்ள La Saletteக்கு தங்களது முதலாளியின் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றனர். 1846ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதியன்று மாலை ஏறக்குறைய 3 மணி இருக்கும். பசுமாடுகள் மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருக்க, இவ்விரண்டு சிறாரும் அவற்றின் பின்னே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள், ஓர் அழகான பெண், சூரியனைவிட ஒளி மிகுந்தவராய், ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு, தலைகவிழ்ந்தபடி இரண்டு கைகளையும் முட்டுவாயில் வைத்து அழுது கொண்டிருந்ததைக் கண்டனர்.
அந்த அழகிய பெண் பற்றி வருணித்த Mélanieயும், Maximinம், அப்பெண் நீண்ட வெள்ளை உடை அணிந்திருந்தார். அது முத்துக்களால் நிறைந்திருந்தது. அவருடைய காலணிகள் பொன்னிற வார்ப்பூட்டுக்களாலும்(buckles), ரோஜா மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தலையில் வைத்திருந்த மகுடமும் ரோஜாக்களால் நிறைந்திருந்தது, கழுத்தில் ஒரு பெரிய சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சிலுவைக்கு ஒரு பக்கத்தில் ஒரு சுத்தியலும், அடுத்த பக்கத்தில் கொரடும் இருந்தன. அந்தச் சிலுவையில் கிறிஸ்துவின் உருவம் மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தபோது, ஏதோ அவர் ஒளியால் செய்யப்பட்டவராக இருந்தார் என்று கூறியுள்ளனர். மேலும், ‘அப்பெண் ப்ரெஞ்ச் மொழியிலும், நாங்கள் பேசும் மொழியிலும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார், அழுது கொண்டே பேசினார். அனைத்து மக்களுக்கும் சொல்வதற்கென ஒரு செய்தியையும் சொன்னார், அதனையும் அழுது கொண்டே சொன்னார்’ எனவும் அச்சிறார் விவரித்துள்ளனர். அச்சிறார் வருணித்த பெண்ணாகிய அன்னைமரியா சொன்ன செய்தி இதோ...
மக்கள் மனம் மாறாவிட்டால் அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடுமையானதாக இருக்கும், அறுவடைப் பயிர்கள் வெப்புநோயால் பாதிக்கப்படும், கடும் பஞ்சமும் ஏற்படும், இம்மக்களுக்காகத் தான் தொடர்ந்து தனது மகன் இயேசுவிடம் மன்றாட வேண்டும், ஆயினும் இம்மக்கள் ஞாயிறு கடன்திருநாளை அனுசரிப்பதில்லை. தெய்வநிந்தனை வார்த்தைகளைப் பேசுகின்றனர், தனது மகனின் பெயரையும் அவமானப்படுத்துகின்றனர் என்று சொன்னதாக அச்சிறார் கூறியுள்ளனர். அத்துடன் இவ்விரு சிறாரிடம் தனித்தனியாக ஒவ்வோர் இரகசியத்தைச் சொல்லி அவற்றை வெளியிட வேண்டாமெனவும், அதேநேரம் தான் சொல்லிய செய்தியை பரப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு அப்பெண் மறைந்துவிட்டார் என்றும் அச்சிறார் கூறியுள்ளனர். அச்சிறார் அன்னைமரியாவைக் காட்சியில் கண்டபோது பசுக்கள் அமைதியாகப் படுத்து உணவை அசைபோட்டுக் கொண்டிருந்தன என்று மெலானி சொல்லியுள்ளார். இவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை, காட்சிக்கு அடுத்த நாள் எழுதி வைத்துள்ளனர். இவ்விருவரும் அன்னைமரியா தங்களுக்குக் கூறிய இரகசியங்களை அப்போதைய திருத்தந்தை 9ம் பயஸுக்கு அனுப்பி வைத்தனர். ஆயினும், இவ்விருவருக்குமே ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கப்பட்ட இரகசியம் என்னவெனத் தெரியாது.
Maximinம், Mélanieம் காட்சி கண்ட La Salette ஊரிலுள்ள Sous-Les Baisses மலையில் 1852ம் ஆண்டில் சலேத் அன்னைக்கு ஆலயம் கட்டும் பணி தொடங்கியது. அது 1865ம் ஆண்டில் முடிக்கப்பட்டு, 1879ம் ஆண்டில் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது. இரண்டு உயரிய கோபுரங்களைக் கொண்டு, உரோமன் மற்றும் பைசாண்ட்டைன் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இப்பசிலிக்கா சலேத் அன்னைமரியா திருத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒரு துறவு இல்லம், தியான இல்லம், ஒளிச் சிற்றாலயம், வரவேற்பு அறை போன்றவை உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சனவரி 2ம் தேதி இங்கு நன்றி நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் விழா ஒளிவிளக்குகள் இவ்விடத்தில் புகழ்பெற்றவை. ஆண்டுதோறும் 10 ஏக்கர் நிலத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் விளக்குகளால் இவ்விடம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பசிலிக்காவில் செபிப்பதற்கும், இதனைக் காண்பதற்கும் 5 இலட்சம் மக்கள்வரை செல்கின்றனர். சலேத் அன்னைமரியா, Maximin, Mélanie ஆகிய இரண்டு சிறாருக்கு அறிவித்த செய்திகள் அப்பசிலிக்காவில் 9 வண்ணக் கண்ணாடி சன்னல்களில் வரையப்பட்டு எழுதப்பட்டுள்ளன.
முதல் சன்னலில், ‘எனது மக்கள் பணியவில்லையென்றால்....’ என்றும், 2வது சன்னலில், ‘நான் உங்களுக்கு 6 நாள்கள் வேலை செய்யக் கொடுத்துள்ளேன்...’ என்றும், 3வது சன்னலில், ‘வாகன ஓட்டுனர்கள் எனது மகனின் பெயரை வீணாக உச்சரிக்கிறார்கள்...’ என்றும், 4வது சன்னலில், ‘ஒரு பெரும் பஞ்சம் ஏற்படும்...’ என்றும், 5வது சன்னலில் ‘என் மக்கள் மனம் மாறினால்..’ என்றும், 6வது சன்னலில், ‘எனது குழந்தைகளே நீங்கள் நன்றாகச் செபம் செய்கின்றீர்களா...’ என்றும், 7வது சன்னலில் ‘தவக்காலத்தில் அவர்கள் நாய்களைப் போல மாமிசக் கடைக்குச் செல்கின்றார்கள்...’ என்றும், 8வது சன்னலில், ‘விளைச்சல் நிலத்திற்கு அருகில் ஒருகாலத்தில்...’ என்றும், 9வது சன்னலில், ‘இச்செய்தியை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்யுங்கள்...’ என்றும் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சலேத் அன்னைமரியா காட்சியில் கூறியவை.
அன்பு நேயர்களே, அன்னைமரியா காட்சி கொடுத்த இடங்களில் அந்த ஊரின் பெயரால் அவர் அழைக்கப்படுகிறார். சலேத் அன்னைமரியாவைக் காட்சியில் கண்ட Maximin, தனது 39வது வயதில் 1875ம் ஆண்டு மார்ச் முதல் தேதி அவரது சொந்தக் கிராமமான Corpsல் இறந்தார். Mélanie, 1904ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இத்தாலியின் Altamuraவில் இறந்தார். இவர்களின் காட்சி இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இது உண்மையானது என்று Grenoble ஆயர் Philibert de Bruillard அறிவித்தார்.
La Salette பங்கிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 1846ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இரண்டு ஆடுமேய்க்கும் சிறாருக்கு புனித கன்னிமரியா காட்சி கொடுத்தது உண்மையே. எனவே சலேத் அன்னைமரியா வழிபாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீரிக்கிறோம் என ஆயர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தக் காட்சியில் சலேத் அன்னைமரியா அச்சிறாரிடம், குழந்தைகளே நீங்கள் செபம் செய்கிறீர்களா என்று கேட்டு தினமும் செபிப்பதன் முக்கியத்துவத்தையும் திருப்பலிக்குச் செல்ல வேண்டுமென்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். மனம் மாற வேண்டியதன் அவசியத்தையும், இறைவனின் பெயரை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார். அன்பர்களே, தவக்காலத்தை துவக்கியுள்ளோம். மனம் மாற வேண்டியதன் தேவையை உணருவோம். சலேத் அன்னைமரியா சொன்னது போல தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்