மாநில அரசின் சுற்றுலாத் திட்டத்தை எதிர்க்கும் கோவா மக்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 23, இஞ்ஞாயிறன்று, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான கோவாவிலுள்ள குழந்தை இயேசு பசிலிக்கா அருகே அரசு மேற்கொள்ளவிருக்கும் சுற்றுலாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பழைய கோவாவில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் உட்பட ஏறக்குறைய 700 பேர் ஒன்றுகூடி போராட்டம் ஒன்றை நடத்தினர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத் திருவுடல் வைக்கப்பட்டிருக்கும் இப்பசிலிக்காவிற்கு அருகில் இடிந்துபோன நிலையில் இருக்கும் 15-ஆம் நூற்றாண்டின் கோவில் பகுதியில் 'சுற்றுலா வணிகமையம்' ஒன்றைக் கட்டுவதற்கு கோவா சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ள வேளை, இந்தப் போராட்டம் இடம்பெற்றதாகவும் உரைக்கிறது இச்செய்தி நிறுவனம்.
உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மதக் குழுக்கள், மற்றும் Save Old Goa என்னும் அமைப்பு உட்பட, இந்தப் பகுதியின் வரலாற்று, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த தங்களின் அக்கறையை காரணம் காட்டி, இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக, வணிக ரீதியான இந்த மேம்பாடு, இந்தத் திருத்தலத்தின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் என்று கத்தோலிக்கத் தலைவர்கள் வாதிடும் அதேவேளையில், இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இம்மாநில அரசு, இந்தத் திட்டத்தை திருப்பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக நியாயப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது இச்செய்தி நிறுவனம்.
இருப்பினும், இத்திட்டத்திற்கு முன்மொழியப்பட்ட இடம் பசிலிக்காவிலிருந்து 100 மீட்டருக்குள் இருப்பதால், இது பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் கட்டுமானத்தைத் தடைசெய்யும் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் அழிபாட்டுச் சின்னங்கள் (AMASR) சட்டத்தின் கீழ் விதிமுறைகளை மீறுகிறது என்று கூறப்பட்டுள்ளதையும் இச்செய்திக் குறிப்பு.
மார்ச் மாதத் தொடக்கத்தில் இத்திட்டத்தின் அடித்தளப் பணிகளின் போது கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது என்று உரைக்கும் இச்செய்தி நிறுவனம், மக்களிடம் இது குறித்த அக்கறைகள் வெளிபட்டபோதிலும், இந்தத் திட்டத்திற்குத் தலத்திருஅவை அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்ததாக கோவாவின் சுற்றுலா அமைச்சர் கூறியதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்