MAP

அருள்சகோதரிகள் மற்றும் நலவாழ்வுப் பனியாளர்களுடன் ஆயர் John Alphonse Asiedu அருள்சகோதரிகள் மற்றும் நலவாழ்வுப் பனியாளர்களுடன் ஆயர் John Alphonse Asiedu   (Foto: Sr. Sylvie Lum Cho, MSHR/Ghana)

நோய்வாய்ப்பட்ட மற்றும் கருவுற்றப் பெண்களுக்கு உதவும் நலவாழ்வு மையம்

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானாவின் கிராமப்புறப் பகுதியான அமன்க்வாக்ரோமில் (Amankwakrom) உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்கள் மற்றும் கருவுற்றப்பெண்களுக்கு பராமரிப்பையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி அன்னை மரியின் திருச்செபமாலை மறைப்பணியாளர்கள் சபை அருள்சகோதரிகள் தன்னார்வ மனதுடன் பணியாற்றி வருகின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நோய்வாய்ப்பட்ட மற்றும் கருவுற்றப் பெண்களுக்கு உதவும் நலவாழ்வு மையமானது இறைவனின் அருளால் வாழ்கிறது, மக்களிடமிருந்து நல்லெண்ணத்தைப் பெறுகின்றது என்றும், உங்கள் பணியைச் செய்யுங்கள், மறைப்பணியின் கடவுள் அதைக் காத்துக்கொள்வார்” என்ற தனது நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அருள்சகோதரி Nkechi

மார்ச் 17, திங்கள்கிழமை கிழக்கு ஆப்ரிக்காவின் கானா பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ஆற்றி வரும் நலவாழ்வுப் பணிகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Nkechi.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானாவின் கிராமப்புறப் பகுதியான அமன்க்வாக்ரோமில் (Amankwakrom) உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்கள் மற்றும் கருவுற்றப் பெண்களுக்கு பராமரிப்பையும், மருத்துவ உதவிகளையும் வழங்கி, அன்னை மரியின் திருச்செபமாலை மறைப்பணியாளர்கள் சபை அருள்சகோதரிகள் தன்னார்வ மனதுடன் பணியாற்றி வருகின்றனர்.

சகோதரிகள் ஆற்றிவரும் நலவாழ்வுப் பணிகளுக்கு பொருளாதார ரீதியாக கிராமப்புற தலைவர்கள் ஆதரவளிக்க முடியவில்லை என்றாலும், தங்களது ஊர் மக்களுக்கு அருள்சகோதரிகள் ஆற்றிவரும் பணிக்கு தங்களது மகிழ்ச்சியாலும் நிறைவான மனதாலும் நன்றி செலுத்துகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி ந்கெச்சி.

ஏழைகளாக இருந்தாலும், தலைவர்கள் எப்போதும் தங்களுடன் இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்த அருள்சகோதரி அவர்கள், எதைச் செய்தாலும், அருள்சகோதரிகளோடு கலந்துரையாடி அவர்களை அழைத்து பொதுப்பணிக்காக மக்களை ஒன்றிணைக்கின்றார்கள் என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கானாவின் அமன்க்வாக்ரோமில் உள்ள புனித செபமாலை நலவாழ்வு மையமானது, ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு நலவாழ்வுப் பணிகளை வழங்கி மக்களுக்கு உதவிவருகின்றது. இதன் வழியாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மீட்பளிக்கும் நலவாழ்வுப் பாதுகாப்புக்கான உறுதிகளை வழங்கியுள்ளது.

மிக அதிக வறுமை நிலையில் வாழும் அமன்க்வாக்ரோம் மக்கள் பலர் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல், நோயினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே இறக்கின்றனர் என்றும், கருவுற்றப் பெண்கள் மருத்துவ செலவீனங்களுக்கு அஞ்சி, வீட்டிலேயே மகப்பேறு அடைவதை விரும்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி Nkechi.

சிலர் இரு சக்கரவாகங்களில் பயணித்து மருத்துவமனையை அடைய முயற்சிக்கும் வேளையில் மோசமான சாலைப் போக்குவரத்து காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர், உயிரிழக்கின்றனர் என்றும், அமன்க்வாக்ரோமில் உள்ள மக்களின்  தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே உள்ளதால், மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் சந்திக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Nkechi.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மார்ச் 2025, 14:03