சிறந்த புத்தகத்திற்கான விருது பெற்ற அருள்சகோதரி தெரசா
மெரினா ராஜ் - வத்திக்கான்
சிறந்த புத்தகத்திற்கான விருதினைக் கடவுளின் எதிர்பாராத வருகையாகப் பார்ப்பதாகவும், கடவுள் தன்மீது வைத்திருக்கும் நிபந்தனையற்ற அன்பின் அடையாளமாகப் பார்ப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி தெரசா ஜோசப்.
சலேசிய சபை அருள்சகோதரியான தெரசா ஜோசப் அவர்கள் தான் எழுதியுள்ள “Dream Big Dream True” என்னும் புத்தகத்திற்கு அண்மையில் சிறந்த புத்தகத்திற்கான விருது கிடைத்துள்ள நிலையில் அதுகுறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு இந்தியாவின் தூய பவுல் பதிப்பகத்தாரால் முதன்முதலில் வெளியிடப்பட்ட இப்புத்தகமானது 2025-ஆம் ஆண்டு சனவரி 31 அன்று, Wings (Wings Publication International) எனப்படும் பன்னாட்டு பதிப்பகத்தாரின் முன்முயற்சியால், "தனிப்பட்ட மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி" என்ற பிரிவில் சிறந்த புத்தகம் 2025 (Golden Book Award 2025) என்ற விருதைப் பெற்றது.
கடவுள் அவரது காலத்தில் எல்லாவற்றையும் அழகாக மாற்றுவதற்கான வழி இப்புத்தகத்திற்கான விருது என்று தான் உணர்வதாக எடுத்துரைத்துள்ள அருள்சகோதரி அவர்கள், கடவுளின் நேரத்தில் அவரது வழியில் செயல்பட தன்னை அனுமதிக்கும் செயலை தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை என்னும் பள்ளியில் காத்திருப்பின் அழகைத் தான் கற்றுக்கொண்டதாகப் பகிர்ந்துள்ள சகோதரி தெரசா அவர்கள், ஏற்ற - இறக்கங்கள், மகிழ்ச்சி – துயரங்களில், நட்புறவும் அனுபவமும் கடவுளின் காலத்தில் எல்லாவற்றையும் அழகாக்குகின்றது என்று எடுத்துரைத்துள்ளார்.
பொறுமையைப் பற்றிக்கொள்ளுங்கள், கடவுளின் நேரத்தை விரைவுபடுத்த முயற்சிக்காதீர்கள் என்று வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி தெரசா அவர்கள், உரோமையில் உள்ள கிரகோரியன் திருப்பீடக் கல்லூரியின் முன்னாள் மாணவியாவார். இவர் விருது பெறுவதற்கான மின்னஞ்சலைத் தான் பெற்றபோது மிகவும் மகிழ்ந்ததாக எடுத்துரைத்து தனது அனுபவங்களையும் உணர்வுகளையும் வத்திக்கான் செய்திகளுக்குப் பகிர்ந்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள வாசகர்களின் இதயங்களையும் மனதையும் கவர்ந்துள்ள இப்புத்தகமானது, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 10 முறை பதிப்பிடப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை, சுய அன்பு, நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் நட்பு போன்ற தலைப்புகளில் ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கும் இப்புத்தகமானது, ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குகிறது.
“Dream Big Dream True” என்னும் புத்தகமானது ஆங்கிலம், பிரெய்லி, மராத்தி, இந்தி மற்றும் காசி உட்பட பல மொழிகளில் பிரெய்லி முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 25,000க்கும் மேற்பட்ட பிரதிகளும் விற்கப்பட்டுள்ளன.
வாசகர்களுடன் ஆழமான தொடர்பை உருவாக்குகிறது மற்றும் நம்பிக்கையை வழங்குகிறது என்றும், ஒரு சிறந்த விற்பனையாளராக மட்டுமல்லாமல், சகோதரி அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்களையும் வெற்றிகளையும் மக்களுக்கு வெளிப்படுத்தி உற்சாகமுடன் வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் புத்ததகம் அமைகிறது என்றும் வாசகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்