MAP

மணிப்பூர் கலவரக் காட்சி (கோப்புப்படம்) மணிப்பூர் கலவரக் காட்சி (கோப்புப்படம்)  (AFP or licensors)

மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்புப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாக ரிச்சர்ட் லால்தன்புயா ஹ்மர் மீதான இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்று தலத்திருஅவையின் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 16, இஞ்ஞாயிறன்று, இந்தியாவின் மணிப்பூரில் உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஒரு முக்கிய பூர்வகுடித் தலைவரான ரிச்சர்ட் லால்தன்புயா ஹ்மர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

இந்தத் தாக்குதல், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ குக்கி-சோ பூர்வகுடி  சமூகங்களுக்கும், இந்து பெரும்பான்மையினரான மெய்தி குழுவிற்கும் இடையே இன மோதல்களை அனுபவித்து வரும் இப்பகுதியில் மேலும் வன்முறையைத் தூண்டியுள்ளது என்று கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

ஹமர் சமூகத்தின் தலைவரும், பூர்வகுடி இனத் தலைவர்கள் மன்றத்தின் (ITLF) உறுப்பினருமான ஹமர், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்தத் தாக்குதல், பூர்வகுடித் தலைவர்களுக்கு எதிரான பரந்த அளவிலான வன்முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது என்றும், இதனை பூர்வகுடி இனத் தலைவர்கள் மன்றம் கண்டித்துள்ளதுடன், பொறுப்புக்கூறலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாக ஹ்மர் மீதான இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்று தலத்திருஅவையின் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர் என்றும் உரைத்துள்ளது அதன் அச்செய்திக் குறிப்பு.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 60,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், இவர்களில் முதன்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் எனவும் கூறுகிறது இச்செய்தி.

மணிப்பூரின் மக்கள்தொகையில் 41 விழுக்காடு பூர்வகுடி சமூகங்கள் எனவும், இவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் எனவும் கூறும் அச்செய்தி நிறுவனம்,  அதேவேளையில், அரசைக் கட்டுப்படுத்தும் மெய்தி இன மக்கள் 53 விழுக்காடு உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மார்ச் 2025, 15:37