MAP

விடுதலை செய்யப்பட்ட சிறைக்கைதிகளை வரவேற்கும் அவர்தம் உறவினர்கள் விடுதலை செய்யப்பட்ட சிறைக்கைதிகளை வரவேற்கும் அவர்தம் உறவினர்கள்   (AFP or licensors)

யூபிலி ஆண்டை முன்னிட்டு கியூபாவில் சிறைக்கைதிகள் விடுவிப்பு!

விடுதலை செய்யப்படவுள்ள இந்த 553 கைதிகளில் பலர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பெரிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் பதவிக் காலத்தின் இறுதி நாட்களில் ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும்,  திருப்பீடம் ஏற்படுத்திக்கொண்ட இடையீட்டாளர் ஒப்பந்தம் இரண்டையும் தொடர்ந்து, கியூபா 553 கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலையை வழங்குகிறது என்று செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

கடந்த ஜனவரி 2023-ஆம் ஆண்டில், கியூபா நாட்டு அரசுடன் திருப்பீடம் ஏற்படுத்திக்கொண்ட இடையீட்டாளர் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அமெரிக்கப் பயங்கரவாதத் தடுப்புப்பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கினார் என்றும், அதற்கு ஈடாக, கியூபா 553 கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும்  இந்த 553 கைதிகளில் பலர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பெரிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் யாவும் போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கியூபாவை வலியுறுத்தியதன் பெயரில், அந்நாட்டின் அரசுத் தலைவர் டியாஸ்-கேனல் அவர்கள் இந்த முடிவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் தெரிவித்தார் என்றும், இது 2025 -ஆம் ஆண்டின் யூபிலி விழாவின் நோக்கமுடன் இணைந்து செல்கிறது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் நீக்கம் செய்யப்பட்டது என்றாலும், கைதிகள் விடுதலை அவ்வப்போது தொடர்கிறது என்றும் கூறுகிறது அச்செய்தித் தொகுப்பு.

மேலும் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் சிலர் எதிர்க்கட்சி ஆர்வலர்கள், ஆனால் பலர் அரசியல் கைதிகள் அல்ல என்றும், போராட்டங்களில் ஈடுபட்ட சில முக்கிய நபர்கள் இன்னும் சிறையில் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது அச்செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மார்ச் 2025, 12:50