மதமாற்றம் செய்வோருக்கு மரணதண்டனை வழங்க ஆலோசனை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்கும் வகையில் மத்திய பிரதேச மாநில சட்டம் மாற்றியமைக்கப்படும் என அந்த மாநில முதல்வர் அறிவித்திருப்பது, இந்தியக் கிறிஸ்தவர்களிடையே ஆழ்ந்த அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது.
மதமாற்றத்திற்கு மரணதண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட மாற்றம் இடம்பெறும் என்று மார்ச் 8, சனிக்கிழமையன்று பொதுக்கூட்டமொன்றில் முதல்வர் மோகன் யாதவ் அறிவித்தது குறித்து கவலையை வெளியிட்ட சர்வ இசை மகாசபா என்ற கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் ஜெர்ரி பால் அவர்கள், இத்தகைய போக்கு எரியும் நெருப்பில் எரிசக்தி எண்ணையை ஊற்றுவதுபோல் உள்ளது என்றார்.
இளம்பெண்களை பாலியல் வன்மம் செய்வோருக்கு தூக்குத்தண்டனை வழங்கும் சட்டம் இருப்பதுபோல், மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கும் மரணதண்டனை வழங்கும் வகையில் இச்சட்டம் மாற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளது, கிறிஸ்தவ வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கின்றனர் அம்மாநில கிறிஸ்தவத் தலைவர்கள்.
ஏற்கனவே மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் அச்சுறுத்தப்படும் சூழலில் முதல்வரின் இந்த அறிவிப்பின்வழி மத தீவிரவாதிகளின் போக்குக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் எனவும் கிறிஸ்தவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் மதமாற்றத்திற்கு எதிரான கடுமையான சட்டங்கள் அமலில் இருக்கும் 11 மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் உள்ளது.
மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தண்டனை பெறும்போது, இந்த மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாற்ற முயல்வோருக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தின் 7 கோடியே 20 இலட்சம் மக்கள் தொகையில் 0.27 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்