அமெரிக்கத் தலத்திருஅவையுடன் ஒன்றிப்பை வெளிப்படுத்தியுள்ள CELAM!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதில் அமெரிக்கத் தலத்திருஅவையின் முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவை.
அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அமெரிக்க இடம்பெயர்வு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு தனது ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளது CELAM.
இந்தக் கடிதத்தில், பூர்வகுடி கலாச்சாரங்கள் மற்றும் வன்முறை மற்றும் வாய்ப்பு இல்லாமை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் போராட்டங்களால் வடிவமைக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மக்களின் பகிரப்பட்ட அடையாளத்தையும் வலியுறுத்தியுள்ளது இவ்வாயர் பேரவை.
பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களின் சொந்த நாடுகளில் அரசின் ஆதரவு தோல்வியடைந்துள்ள நிலையில், சிறந்த வாழ்க்கையைத் தேடிவரும் அவர்களுக்கு அமெரிக்கா ஒரு முக்கிய இடமாக உள்ளதை இவ்வறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது இவ்வாயர் பேரவை
புலம்பெயர்ந்தோரை வரவேற்பது, அவர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலை வழங்குவது மற்றும் அவர்களின் உடனடி மற்றும் நீண்டகால தேவைகளுக்கு உதவுவது உள்ளிட்ட நீண்டகால ஆதரவுக்காக அமெரிக்கத் தலத்திருஅவைக்கு நன்றி தெரிவித்துள்ளது CELAM.
தங்கள் சொந்த நாடுகளில் தங்க விரும்புவோர் மற்றும் பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ள இரு தரப்பினருக்கும் ஆதரவளிப்பதில் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி அதன் கடிதத்தை நிறைவு செய்துள்ளது இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்