"நம்பிக்கையின் நெசவாளர்கள்" விருது வழியாகப் பெண்களுக்கு மேம்பாடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தங்கள் குடும்பங்கள், குழுமங்கள் மற்றும் சமூகங்களில் நம்பிக்கையின் ஆதாரங்களாகப் பெண்களை மேம்பாடு அடையச் செய்யும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு "நம்பிக்கையின் நெசவாளர்கள்" என்ற விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்ச் 11, இச்செவ்வாய்க்கிழமையன்று, உரோமையில் "நம்பிக்கையின் நெசவாளர்கள்" விருது வழங்கும் இந்த நிகழ்வானது அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களால் தொடங்கிவைக்கப்பட்டது என்றும் அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"நம்பிக்கையின் நெசவாளர்கள்" என்ற இந்த விருது எதிர்நோக்கின் யூபிலி ஆண்டால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகளை மேம்பாடு அடையச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
உலகளவிலும், குறிப்பாக, குறைந்த வயது திருமணங்கள் போன்ற அநீதிகளையும் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் பகுதிகளிலும், பெண்கள் எவ்வாறு நம்பிக்கையை வளர்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதே இந்த விருதின் நோக்கமாகும் என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டிற்கான நிதியுதவியை வழங்கும் இந்த விருது, புதிய முயற்சிகளைத் தொடங்கவும், தொடர்ந்து வரும் முயற்சிகளைத் தக்கவைக்கவும் உதவுகிறது என்றும், இது பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் சமத்துவம், எதிர்கொள்ளல், புதுப்பித்தல் என்ற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டது என்றும் உரைக்கின்றது.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் இந்த நிதியுதவி சிறிய அளவாக இருந்தாலும், அடிமட்ட அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இது முக்கிய நிதி வளங்களை வழங்குகிறது என்றும், நீடித்த மாற்றத்தை உருவாக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு, பெண்களுக்கு மேம்பாடு அளிப்பதற்கான முயற்சிகளைக் கொண்டாடுவதும் ஆதரிப்பதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்