MAP

மியான்மார் கோவில் ஒன்று மியான்மார் கோவில் ஒன்று  (AFP or licensors)

மியான்மார் நாட்டில் தமிழர் ஒருவர் ஆயராக திருநிலைப்பாடு

சமூகத்தில் காணப்படும் ஜாதிய அமைப்புமுறைகள், மற்றும் பிரிவினைகளை ஒழிக்க ஒவ்வொரு கத்தோலிக்கரும், குடிமகனும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் மியான்மார் கர்தினால் போ.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மியான்மார் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் இரத்தம் சிந்தல்களில் ஒன்றிப்புக்கான அழைப்பை அனைவர் முன்னிலையிலும் வைப்பதாக உரைத்தார் மியான்மார் கர்தினால் சார்லஸ் மவுங் போ.

மியான்மார் நாட்டின் யாங்கூன் பெருமறைமாவட்ட துணை ஆயராக Raymond Wai Lin Htun அவர்களை திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் போ அவர்கள், மியான்மாரில் காயப்படுத்தப்பட்டுள்ள மக்களிடையே குணப்படுத்தலின் நம்பிக்கையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், அது நம் ஒவ்வொருவரின் குணப்படுத்தும் இருப்பு, வார்த்தைகள் மற்றும் மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் வழி வெளிப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சமூகத்தில் காணப்படும் ஜாதிய அமைப்புமுறைகள், மற்றும் பிரிவினைகள் குறித்தும் கவலையை வெளியிட்ட கர்தினால் போ அவர்கள், இவைகளை ஒழிக்க ஒவ்வொரு கத்தோலிக்கரும், குடிமகனும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மியான்மார் நாட்டின் முதல் தமிழ் ஆயராக Raymond Wai Lin Htun அவர்களை திருநிலைப்படுத்திய கர்தினால், நெருக்கடிகளையும் வருங்காலம் குறித்த நிலையற்ற தன்மைகளையும், அரசியல் குழப்பத்தையும், குடிபெயர்தல்களையும், சமூக துயர்களையும் சந்தித்துவரும் மியான்மாரில்  ஆயர் என்பவர் நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என மொழிந்தார்.

இலஞ்ச ஊழல், அநீதி மற்றும் அச்சம் நம்மை ஆட்கொண்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில் உண்மை, நீதி, மற்றும் இரக்கத்தின் கருவியாக ஆயர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் கர்தினால் போ.

மதம் மற்றும் இனங்களின் மோதல்களாலும் போர்களாலும் பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஒன்றிப்பிற்காக அனைவரும் உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் மியான்மார் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மார்ச் 2025, 12:11