தடம் தந்த தகைமை : ரூத்தை போவாசு தன் மனைவியாக ஏற்றுக்கொள்ளல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே. அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், “நீரே வாங்கிக்கொள்ளும்” என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார். அதன்பின், போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, “நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி. மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின் முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி” என்றார்.
இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார். சுற்றுப்புறப் பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று சொல்லி, அவனுக்கு ‛ஓபேது’ என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்