தடம் தந்த தகைமை - பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்பிடித்தான்; போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஐவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான். மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான். பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு, யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.
யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான். அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே, யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான். அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான். அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்