தடம் தந்த தகைமை - நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இயேசு மறைநூல் அறிஞர் ஒருவரிடம், நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை. (மாற் 12:34) என்றார்.
‘சட்டத்தின்படி ஒழுகுதலே கடவுள் விடுக்கும் வாழ்வு. சட்டங்களை மீறினால் கடவுள் கோபம் கொள்வார், தண்டிப்பார். அத்தண்டனை தலைமுறைகளையும் தொடரும்’ என்றே ஆண்டாண்டுகளாகச் சொல்லப்பட்டது. எனவேதான் மறைநூல் அறிஞர் சட்டம் பற்றிய கேள்வியை மிக நுணுக்கமாக இயேசுவிடம் தொடுத்தார். இயேசு அறிவுறுத்திய இறையாட்சி சட்டக் கோட்டைக்குள் அடைபட்டது அன்று. நேயமும், நேசமும், நீதியும், நிறைவும் நிலவும் நன்மைகளின் சங்கமம்.
உயர் விருதுகள் பல பெற்ற மாஷி என்ற கவிஞரின் மாடி வீட்டருகே ஓர் ஓலைக் குடிசை. ஓர் இரவில் இரைச்சலிட்டு வந்த காற்றில் மண்ணெண்ணெய் விளக்குச் சரிந்து குடிசை தீப்பிடித்துச் சாம்பலானது. தீக்காயங்களோடு பாட்டியும் பேத்தியும். அடுத்த நாள் கவிதை அரங்கில் மாஷியின் ‘தீ’ பற்றிய கவிதை பற்றி எரிய கரவொலி அதற்கு உரமிட்டது. அரங்கிலிருந்த ஒருவர் மெல்ல எழுந்து வேகக் காற்று போலக் கேட்டார். ‘தீயைப் பார்த்துக் கவிதை புனைந்த நீர் தீயை அணைக்க ஒரு வாளி தண்ணீர் ஊற்றியிருக்கலாமே!’ மாஷி அருகிலிருந்தாலும் மனதால் தொலைவில் இருந்தார். பல வேளைகளில் நாமும்....
கடவுளும், சொர்க்கமும், நரகமும் நமக்குள்ளேதான்.
இறைவா! நீர் நேயங்களின் கடவுள். நேயங்களால் உம்மோடு நெருங்கி வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்