MAP

பிரான்சில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்பு பிரான்சில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்பு  (AFP or licensors)

தடம் தந்த தகைமை : தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்

தம்மைத் தாழ்த்துவதிலும், பின்னிறுத்துவதிலும் இறைஇயல்பு முன்னிறுத்தப்படுவதோடு, அந்த இறைவனே நம்மை முன்னிறுத்துவார் என்ற நற்பார்வைதனை இயேசு கற்றுத் தருகின்றார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். (லூக் 14:11)

விருந்துகள் வணிகக் கலாச்சாரத்தின் பிணிகளாக உருமாற்றப் பட்டுள்ளன. யார் யாருக்கு எதைக் கொடுத்தார்களோ அதைத் திரும்பப் பெறும் யுக்தியாகத் திருத்தப்பட்டுள்ளன. ஒருவிதத்தில் எல்லா அன்பளிப்புகளும் வட்டியில்லாக் கடன்களாகவே கருதப்படுகின்றன. இந்த விருந்தின் பார்வையில் குடும்பங்கள் மட்டுமன்றி சமூக உறவுகளும் நகர்கின்றன. ‘மதித்தால் மதிப்பு, இல்லையென்றால் மிதிப்பு’ என்ற சூழலில் இயேசு ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை அறிமுகம் செய்கின்றார்.

நான் ‘இன்னார்’ என்பதால் எனக்கு முன்னிலையும், முன்னுரிமையும், முதல் இருக்கையும் கொடுக்க வேண்டுமென நடந்து கொள்வது ஒருவித ‘மதிப்பு யாசிப்பு’. அது மனநிலை பாதிப்பும் கூட. அந்த மனப்பாங்கு இயேசுவின் சீடத்துவத்திற்கு இடறலானது. தம்மைத் தாழ்த்துவதிலும், பின்னிறுத்துவதிலும் இறைஇயல்பு முன்னிறுத்தப்படுவதோடு, அந்த இறைவனே நம்மை முன்னிறுத்துவார் என்ற நற்பார்வைதனை இயேசு கற்றுத் தருகின்றார். அவ்வாறு தாழ்த்திக் கொள்பவரைக் கோழை எனக் கருதுபவர் இயேசுவைப் புரியாதவரே. தாழ்ச்சி: மகிழ்ச்சியின் அடித்தளம்.

இறைவா! உம்மைப்போல் மனத்தாழ்மையில் பின்வாங்காத நல்லுணர்வைத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மார்ச் 2025, 12:46