தடம் தந்த தகைமை - கடவுள் பார்வையில் அருவருப்பு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும், (லூக் 16:15) என்றார் இயேசு.
நேர்மையின் பாதையில் இருவகை மனிதர்கள் உண்டு. 1. நேர்மையாக வாழ்பவர்கள்: எந்தச் சூழலிலும் தன்னைப் பாராமல், தன்னலம் நாடாமல், தன் பணியைத் தன் மனச்சான்றுக்கு அஞ்சி, தனித்துவமான வாழ்வைத் தொடர்பவர்கள். 2. நேர்மையாளராகக் காட்டுபவர்கள்: எதிலும் சுயலாபம் தேடி, எல்லாரையும் ஏமாற்றி, பொய் புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, நேர்மை, நேர்மை என வாய் கிழிய கத்தி, தன்னைப் போல் யாருமில்லை
எனத் தம்பட்டமிட்டு வாழ்வைத் தொலைப்பவர்கள்.
சுற்றி வாழ்வோரைச் சூசகமாக ஏமாற்றலாம். ஆனால் உடன் வாழும் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. ஏனெனில் மக்கள் நம் புறச் சொற்களையும், செயல்களையும் பார்த்து மதிப்பிடுவர். கடவுள் நம் அகவுணர்வுகளையும், அதன் விளைவுகளையும் பார்க்கின்றவர். நம் நேரிய செயல்களை பொறாமையில் வாழ்வோர் அருவருத்தாலும் கடவுள் அழகுமிக்கதாக ரசிப்பவர். அதற்கேற்ப வாழ்தலே நல்வாழ்வு. நேர்மையாளர் ஒளியையோ இருளையோ கண்டு அஞ்சார்.
இறைவா! நீர் புறத்தை அல்ல, அகத்தை ஆய்ந்தறிந்து அருள் சுரப்பவர். என் அகமறிந்து வழிநடத்துவதற்கு நன்றி!
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்