தடம் தந்த தகைமை - தம் சிலுவையைச் சுமக்காமல்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர், (மத் 10:38) என்கிறார் இயேசு.
சிலுவை, அரசியல் போராளிகளுக்கான கொடூரத் தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது. அச்சூழலில், சிலுவை சுமந்து பின்பற்றல் என்பது எளிதாக ஏற்கப்படும் சிந்தனையன்று. உரோமை ஆதிக்கம் கட்டுக்கடங்காக் காட்டாறுபோலக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஆட்சிக்கெதிராகவோ, அடக்கப்பட்டோரின் சார்பாகவோ மூச்சு விட்டாலும் முடக்கும் மூர்க்கத்தனம் மும்முரமாய் இருந்த வேளையில் இயேசுவின் இப்போதனை இன்னொரு பொருளைப் பொறுப்பாய்ச் சொல்கிறது.
உரோமையரால் சிலுவைக் கொலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எல்லாரும் பெருங்குற்றவாளிகளோ, மக்கள் துரோகிகளோ அல்ல. பெரும்பாலும் மக்கள் சார்பாகக் குரல் எழுப்பியவர்களே. மக்கள் மீதான அன்பினால் விடுதலைக்கான வாசல் திறக்க முற்பட்டவர்கள். அவர்களை அந்த அரசு அழித்தது. அத்தகு அடக்குமுறை இன்றும் வரலாற்றில் தொடர் நிகழ்வாகி நீள்கிறது. ஆயினும் தளராமல் உழைக்கவும், விடியலுக்காகச் சிலுவை சுமக்கவும் தயாராகுதலே இன்றைய கிறிஸ்தவப் புனிதம். பொதுநல உழைப்பில் நம்மைச் சேர்ப்பதும் சிலுவை சுமப்பதும் ஒன்றே.
இறைவா! நேயத்தில் நிலைத்து நீதியில் பயணிக்கையில் எதிர்வரும் துயர்களைத் துணிந்து எதிர்கொள்ளும் ஆற்றல் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்