கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்களின் போலந்து பயணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கர்தினால் தாக்லே அவர்களின் உடனிருப்பும், பிரசன்னமும், ஒன்றிணைந்து செபிக்கவும், கற்றுக்கொள்ளவும், தலத்திருஅவையினரை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது என்றும், எதிர்நோக்கு, மறைப்பணி, ஒன்றிப்பு, ஒருங்கிணைந்த பயண உணர்வு ஆகியவை குறித்து அருள்பணியாளர்களுக்கு அவர் எடுத்துரைத்தார் என்றும் கூறினார் பேராயர் Tadeusz Wojda.
மணீலா உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், போலந்தின் டான்சிகா மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் அண்மையில் பங்கேற்றது குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் டான்சிகா பெருநகர உயர்மறைமாவட்டப் பேராயர் Tadeusz Wojda.
கர்தினால் தாக்லே அவர்களின் உரை மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது என்று எடுத்துரைத்த ஆயர் வோஜ்டா அவர்கள், அனைத்து உரைகளும் மிகவும் சிறப்புமிக்கவைகளாகவும் பல உள்ளார்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியவைகளாகவும், கருத்துச்செறிவு மிக்கவைகளாகவும் இருந்தன என்றும் கூறினார்.
சோபோத்தில் உள்ள தூய ஆவி ஆலயத்தில் கர்தினால் தாக்லே அவர்கள், திருப்பலி நிறைவேற்றி, தவக்காலம் தொடர்பான மறையுரை ஒன்றினையும் வழங்கியதாக எடுத்துரைத்த பேராயர் வோஜ்டா அவர்கள், திருத்தந்தையின் வாழ்த்துக்களை மக்களுக்குத் தெரிவித்ததோடு திருத்தந்தைக்காக செபிக்க அனைவரையும் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
மனந்திரும்புதல், மனமாற்றம், தீமையிலிருந்து விலகி கிறிஸ்துவை நோக்கித் திரும்புதல் என்பன போன்ற கருத்துக்களைக் கர்தினால் தாக்லே அவர்கள் நினைவுபடுத்தினார் என்றும், திருப்பலிக்குப் பின் நடைபெற்ற பொதுநிலையினருக்கான சந்திப்பில் இயேசு கிறிஸ்து நம்மிடம் விட்டுச் சென்ற நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும், திருஅவைப் பணிக்கும் நாம் அனைவரும் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார் என்றும் கூறினார் பேராயர் வோஜ்டா.
அருள்பணித்துவ மாணவர்களுக்கான உரையில், இயேசு கிறிஸ்துவுடன் ஆழமான உறவை உருவாக்க வேண்டும், அருள்பணியாளர்களாகிய நாம் இயேசுவை அடையாளப்படுத்த வேண்டும், உலகில் அவரது பணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், உறுதியான ஆன்மிக உருவாக்கப் பயிற்சி தேவைப்படும் எதிர்கால அருள்பணியாளர்களுக்கு கடவுள் உடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்றும் கர்தினால் சுட்டிக்காட்டியதாகவும் எடுத்துரைத்தார் பேராயர் வோஜ்டா.
தன்னார்வலராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை வலியுறுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், அதை இழந்தவர்களுக்கும் நம்பிக்கையைக் கொண்டு வருவது என்றும், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையைக் கொண்டு வந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள் என்பதையும் கர்தினால் நினைவுபடுத்தினார் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் வோஜ்டா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்