வத்திக்கான் மாநாட்டில் உலகளாவிய வரி நீதிக்கான அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், வரி நீதி மற்றும் ஒன்றிப்பு பற்றிய உயர்நிலை உரையாடலில் பங்கேற்றது என்றும், இது அனைத்துலகக் கூட்டாண்மை (corporate) வரிவிதிப்பு சீர்திருத்தத்திற்கான தனியுரிமை ஆணையம் மற்றும் பாப்பிறை சமூக அறிவியல் கல்விக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது ICN செய்தி நிறுவனம்.
பெப்ரவரி 13, கடந்த வியாழக்கிழமையன்று, வத்திக்கானில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரேசில் அதிபர் லூலா தா சில்வா, ஸ்பெயின் அதிபர் பெத்ரோ சான்செஸ் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்திக்லிட்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து பொருளாதார ஏற்றத்தாழ்வு, பருவநிலை மாற்றம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் கடன் சுமைகளை எதிர்கொள்ள உலகளாவிய வரி சீர்திருத்தங்களின் அவசரத் தேவை குறித்து விவாதித்தனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இம்மாநாட்டில் உரையாற்றிய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தைச் சேர்ந்த (WCC), பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான திட்ட நிர்வாகி அதீனா கே. பெரல்டா (Athena K. Peralta) அவர்கள், வரி அநீதி, காலநிலை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு இடையேயான தொடர்பை வலியுறுத்தினார் என்றும், உலகளாவிய வாயு, வெப்பம், ஒளி உமிழ்வுகளில் பணக்கார நாடுகள் எவ்வாறு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் குறிப்பிட்டார் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. வரி மாநாடு உட்பட புதிய நிதிக் கட்டமைப்பிற்கு இம்மாநாட்டின் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர் என்றும், கடன் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்களுக்கான திருத்தந்தையின் அழைப்பை மனதில்கொண்டு வரி நீதி, பாலினம், காலநிலை நீதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை பெரால்டா அவர்கள் வலியுறுத்தினார் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம். (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்