திருத்தந்தை நலம்பெற அமெரிக்காவில் பல்மத இறைவேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் உடல்நலம்பெற வேண்டி அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள ரெனோ நகரில், வரும் ஞாயிறன்று (மார்ச் 2), பல்மதத் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு இறைவேண்டல் வழிபாடு ஒன்றை அமெரிக்காவாழ் இந்து மதத் தலைவர் இராஜன் செட் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வழிபாட்டில் பல கிறிஸ்தவப் பிரிவுகளின் இறைவேண்டல்களும், முஸ்லிம், இந்து, பௌத்தம், யூத, பஹாய், பூர்வீக அமெரிக்கர், ஆங்கிலம், ஸ்பானிஷ், அரபு, சமஸ்கிருதம், பாலி, பாரசீகம், ஹீப்ரு, பையூட் மொழிகளில் இறைவேண்டல்களும் இடம்பெறும் என்று அமெரிக்காவாழ் இந்து மதத் தலைவர் இராஜன் செட் அவர்கள் ஏற்பாடு செய்து, டோனி கிங் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட கூட்டமொன்றில் தெரிவிக்கப்பட்டதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இறை மறுப்பாளர் (atheist) ஒருவரும் இவ்வழிபாட்டில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார் என்றும், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஆஸ்கார் டல்லஸ் ஸ்மித் அவர்கள், பன்சூரியில் (பண்டைய பக்கவாட்டில் ஊதப்பட்ட மூங்கில் புல்லாங்குழல்) குணப்படுத்தும் சில சிறப்பு இராகங்களைப் பாடவுள்ளார் என்றும் அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இந்து சமூக அனைத்துலக அமைப்பின் தலைவர் இராஜன் அவர்கள், "பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களாகிய நாங்கள், ஒன்றிப்புக்கான ஒரே ஆன்மிகக் குடும்பமாக ஒன்றிணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்பெற இறைவேண்டல் செய்வோம்; மேலும் அவருக்கு ஆற்றல், அமைதி மற்றும் வலிமையைத் தர வேண்டுவோம்; இதன்வழியாக, அவர் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கவும், மேலும் இரக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை மேம்படுத்தவும் முடியும்" என்று கூறினார்.
“பல்வேறு மதத் தலைவர்களாகிய நாங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குணமடை வேண்டும் என்பதில் எங்களின் ஒன்றிப்பைக் காட்டவிரும்புகின்றோம். இதன்வழி, அவர் பணிவு, துணிவு, வலிமை, சேவைமனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில், தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு நல்ல தலைவராக மனிதகுலத்திற்குத் தொடர்ந்து பணியாற்றிட முடியும்” என்று இந்நிகழ்வின் தொகுப்பாளர் டோனி கிங் அவர்களும் தனது எண்ணத்தைத் தெரிவித்தார்.
மேலும் “உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தங்கள் எண்ணங்களில் கொண்டு அவருக்காக இறைவேண்டல் செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்ட இராஜன் அவர்கள், திருத்தந்தை விரைவில் நலமடைய வேண்டும் என தான் வாழ்த்துவதாகவும், இதனால் அவர் அமைதிக்கான உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புதல், ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு ஆதரவளித்தல், மதச் சுதந்திரம், உலகளாவிய உறவு, மதங்களுக்கு இடையிலான உரையாடல், அமைதியான சகவாழ்வு, பொதுவான நன்மைகளை நாடுதல் போன்றவற்றில் தொடர்ந்து ஆர்வம் காட்ட முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்