சிரியாவின் நிலைகுறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம்
சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடி குறித்தும், குறிப்பாக அங்குள்ள கிறிஸ்தவச் சமூகங்கள் தொடர்பாகவும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார் COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Mariano Crociata.
பிப்ரவரி 19, இப்புதன்கிழமையன்று, இதுகுறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆயர் Crociata அவர்கள், சிரியாவின் பத்தாண்டு கால மோதல்கள் அதன் அனைத்து மக்களுக்கும் துன்பம், இடப்பெயர்வு மற்றும் அழிவை ஏற்படுத்தியுள்ளன என்றும், ஆனால் கிறிஸ்தவச் சமூகங்கள் குறிப்பாக அப்பகுதியில் தங்கள் வரலாற்று இருப்பை இழக்கும் ஆபத்தில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தருணத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மதச் சிறுபான்மையினர் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, இந்தச் சமூகங்களைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலகச் சமூகத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் ஆயர் Crociata.
அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமான நிதியுதவி மற்றும் சிரியாவில் தனியார் துறை ஈடுபாட்டிற்கான ஒரு கட்டமைப்பை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவைத் தொடருமாறு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் Crociata அவர்கள், தடைகளை தளர்த்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது என்றும், இது சிரிய மக்களின் நிலைமைகளை மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரியாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை ஆதரிப்பதில் தலத்திருஅவை உறுதியுடன் உள்ளது என்றும், புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பாக, தாங்களாக முன்வந்து அவர்களது வீடுகளுக்குத் திரும்புவதற்கு ஆதரவளிக்கிறது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுளளார் ஆயர்.
ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, அன்னை கன்னி மரியாவின் துணையில் சிரியாவில் அமைதிக்கான இறைவேண்டலை ஊக்குவிக்கிறது மற்றும் அனைத்து சிரியர்களுக்கும் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் எதிர்காலத்திற்கான முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார் ஆயர் Crociata.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்