MAP

அருள்சகோதரி Alina Petrauskaite அருள்சகோதரி Alina Petrauskaite 

துன்புறும் உக்ரைன் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அருள்சகோதரி அலினா

2014-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க ஊடக மையத்துடன் இணைந்து ஐந்து ஆண்டுகளாக rkc.org.ua என்ற போர்ட்டலையும் சமூக ஊடகத்தையும் நிர்வகித்து வருகின்றார் அருள்சகோதரி அலினா

மெரினா ராஜ் – வத்திக்கான்

துன்புறும் உக்ரைன் மக்களுக்குத் தலத்திருஅவை ஆயர்களின் குரலைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல் தேவையில் இருக்கும் மக்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களை அணுகிச் செல்வதையும் கத்தோலிக்க ஊடக மையம் வழியாக செய்து வருவதாக தெரிவித்தார் அருள்சகோதரி. Alina Petrauskaite

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக போரினால் உக்ரைன் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கை கொண்ட மக்களைச் சென்றடைவதற்கான ஒரு முக்கியமான கருவியாக போர்டல் என்னும் கத்தோலிக்கத் தகவல் மற்றும் உதவி அமைப்பு மாறியுள்ளது என்று எடுத்துரைத்தார் அமல அன்னையின் சிறிய சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Alina Petrauskaite.

2014-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க ஊடக மையத்துடன் இணைந்து ஐந்து ஆண்டுகளாக rkc.org.ua என்ற போர்ட்டலையும் சமூக ஊடகத்தையும் நிர்வகித்து வரும் அருள்சகோதரி அலினா அவர்கள், உக்ரைனில் உள்ள உரோமன் கத்தோலிக்க திருஅவையின் தகவல் மற்றும் உதவி அமைப்புக்களுக்கான ஊடக நிலையம் பற்றிய கருத்துக்களை வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

போரில் காயமடைந்தவர்கள், வீரர்கள், இராணுவ வீரர்களின் குடும்பங்கள், பெண்கள், அனைத்து மறைமாவட்டங்களிலும் உள்ள கைம்பெண்கள் ஆகியோருக்காக பணியாற்றுவதாக எடுத்துரைத்த சகோதரி அலினா அவர்கள், வாரத்தின் 7 நாள்களும் இத்தகவல் சேவை மையம் இயங்கி வருவதாகவும், சமூக ஊடகங்களில் காலை முதல் மாலை வரை புதிய தகவல்கள் பகிரப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

rkc.org.ua என்ற வலைத்தளம் காயமடைந்தவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது என்றும், போரில் முன்னணியில் இறந்த வீரர்களின் அன்னையர் மற்றும் மனைவியருக்கான கூட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்த சகோதரி அலினா அவர்கள், இதுபோன்ற சந்திப்புகள் ஒரு பெரிய இழப்புக்குப் பிறகு ஏற்படும் துக்கத்தைக் கடக்க உதவுகின்றன என்றும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் ஒரு சமூகம் நம்மிடையே உள்ளது என்ற நம்பிக்கையையும், துன்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவகையான உதவியையும் வழங்குகின்றது என்றும் தெரிவித்தார்.

கத்தோலிக்க ஊடக மையத்தின் பணி பெரும்பாலும் மற்றவர்களுக்கு கத்தோலிக்க திருஅவைக்கான நுழைவாயிலாக மாறுகின்றது என்றும், திருமுழுக்கு பெற்றதிலிருந்து ஆலயத்திற்குச் செல்லாதவர்கள்,  இப்போது கடவுளுடன் இணக்கமாக வாழ விரும்புபவர்கள், அருளடையாளங்களைப் பெற விரும்பும் மக்கள் போன்றோருக்கு உதவி வருகின்றது என்றும் கூறினார்.

நற்செய்தி அறிவித்தலே கத்தோலிக்க ஊடக மையத்தின் பணி என்றும், கடவுளுக்காகவும் இறையரசிற்காகவும் இத்தகைய ஊடகப்பணியினை தான் முழுமனதுடன் ஆற்றுவதாகவும் எடுத்துரைத்த சகோதரி அலினா அவர்கள், போரினால் ஏற்படும் துயரங்களைத் தானும் அனுபவித்ததாகவும், நமது வாழ்க்கை அதில் நடைபெறும் நிகழ்வுகள் என எல்லாம் கடவுளின் கைகளில் உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2025, 11:06