இணக்கமான சகவாழ்வு என்பது மனித, ஆன்மிக அடையாளத்தின் அடித்தளம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதி மற்றும் மரியாதைக்குரிய இணக்கமான சகவாழ்வு என்பது ஒவ்வொருவரின் மனித மற்றும் ஆன்மிக அடித்தளத்தின் அடையாளம் என்றும், ஒவ்வொரு மத நம்பிக்கையும், வெவ்வேறு அணிகளாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைக்கும் முக்கிய பணியைத் தன்னகத்தேக் கொண்டுள்ளன என்றும் எடுத்துரைத்தார் பேராயர் Waldemar Stanisław Sommertag.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் செனகலின் தலைநகரான டக்கரில் உள்ள பாம்பிலரில் நடைபெற்ற 33 வது (ஜியாரா)இஸ்லாமியக் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் Senegal, Mauritania, Capo Verde மற்றும் Guinea-Bissau பகுதிகளுக்கான அப்போஸ்தலிக்க அரசுத்தூதர், பேராயர் Waldemar Stanisław Sommertag.
கடவுளின் பெயரால், நாம் எப்போதும் ஒன்றுபட வேண்டும், பிரிக்கப்படக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அதிகமாக விரும்புவதாகவும் வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்த பேராயர் அவர்கள், அன்பும் நல்லிணக்கமும் உறவுகளைத் தக்கவைக்கும் மதிப்புகளாக இருக்க வேண்டும் என்றும், பணமும் சுயநலமும் சமூகத்தை அழிக்கின்றன என்றும் கூறினார்.
ஜியாரா என்பது முஸ்லிம்கள் தங்கள் மதத் தலைவர் அல்லது அவர்களின் புனித தலங்களுக்கு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால பக்தி வழிபாடாகும். இந்த நினைவுநாளின்போது, செபம், வழிபாடு, போன்றவற்றோடு மிக முக்கியமாக ஆன்மிகத் தலைவருடனான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் திகழ்கின்றது.
பாம்பிலர் ஜியாரா என்பது செனகல் குடியரசின் மத விழாக்களின் நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் ஒன்றிணைகின்றனர். இஸ்லாமியத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பரிமாறிக் கொள்ளவும் நினைவூட்டவும் ஒரு ஆன்மீக தருணமாக இந்நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்