MAP

சீயோன் மலை  சீயோன் மலை  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 66-3, விண்ணப்பக் குரலைக் கேட்கும் கடவுள்!

கடவுள் நமது குரலுக்குச் செவிசாய்க்குமாறு தாவீது அரசரின் மனநிலையைக் கொண்டிருப்போம்.
விவிலியத் தேடல்:திருப்பாடல் 66-3, விண்ணப்பக் குரலைக் கேட்கும் கடவுள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளின் கொடைகளை மறவாதிருப்போம்!' என்ற தலைப்பில் 64-வது திருப்பாடலில் 8 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 13 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அவ்வார்த்தைகளை இறை ஒளியில் பக்தியுடன் வாசிக்கக் கேட்போம். "எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது. கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார். ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! (வச. 13-20).  

நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவதற்கு முன்பு அருமையான கதை ஒன்றிற்கு இப்போது நமது செவிகளைத் திறப்போம். ஒருநாள் மாடு ஒன்று மேய்ச்சலுக்காக ஒரு காட்டுக்குள் சென்றது. மாலை நேரம் நெருங்கியது. அப்போது ஒரு புலி தன்னை நோக்கி வருவதைக் கண்டு மாடு பயத்தில் ஓடத்தொடங்கியது. அந்தப் புலியும் விடாது அந்த மாட்டைத் துரத்தியது. தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த அந்த மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டதும் அதற்குள் புகத்தொடங்கியது. அதனைத் பின்தொடர்ந்து வந்த புலியும் அக்குளத்திற்குள் புகுந்தது. அந்தக் குளம் ஆழமில்லாததால் அதில் கொஞ்சம்தான் தண்ணீர் இருந்தது. மேலும் அது சேறும் சகதியுமாக இருந்ததால் மாடு அதில் சிக்கிக்கொண்டது. ஆனால் கரைக்கான அதன் தூரம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. அப்போது மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலியால் அம்மாட்டைப் பிடித்து உண்ண முடியவில்லை. இப்போது புலியும் அந்தச் சேற்றுக்குள் சிறிது சிறிதாக மூழ்கத்தொடங்கியது. இந்த இக்கட்டான சூழலில், மாடு புலியைப் பார்த்து, "ஆமா... உனக்குத் தலைவர் யார்" என்று கேட்டது. அதற்குப் புலி, "ஏன் அப்படிக் கேட்கிறாய்? எனக்கு நான்தான் தலைவன். இந்தக் காட்டிற்கு நான்தான் அரசன்... நான் யாருக்கும் சொந்தமில்லை..." என்று மமதையுடன் பதில் கூறியது. உடனே மாடு. "நீ காட்டிற்கே அரசனாக இருந்து என்னப் பயன்? நீயும் என்னைப்போல தானே சேற்றில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாய்? எனவே நீ சாகப்போவது உறுதி” என்று கூறி புன்னகைத்தது. அதற்குப் புலி, “நீ மட்டும் என்ன பிழைக்காவா போகிறாய், நீயும் சாகதானே போகிறாய்” என்று எகத்தாளத்துடன் பதில் கூறியது. அதற்கு மாடு, “நான் கண்டிப்பாக சாகமாட்டேன். காரணம், என்னைப் பராமரித்துப் பாதுகாத்து வரும் என் உரிமையாளர், எப்படியும் என்னைத் தேடிவந்து காப்பாற்றுவார். ஆனால் உன்னை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள்”  என்று அடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் கூறியது. மாடு கூறியது போலவே, சிறிது நேரத்தில் மாட்டின் உரிமையாளர் அதனைத் தேடிவந்து சேற்றிலிருந்து மீட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் புலி மிகவும் ஆபத்தானது என்பதால் அதனை அவர் காப்பாற்ற முன்வரவில்லை. சில மணித்துளிகளில் சேற்றில் சிக்கிய புலி பரிதாபமாக இறந்தபோனது. இந்தக் கதையில் புலி தீயவரின் அடையாளமாகவும், மாடு நல்லவரின் அடையாளமாகவும், மாட்டின் உரிமையாளர் கடவுளின் அடையாளமாகவும், குளம் இந்த உலகத்தின் அடையாளமாகவும், சேறும் சகதியும் இவ்வுலகில் ஏற்படும் துன்ப துயரங்களின் அடையாளமாகவும் எடுத்துக்காட்டப்படுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆக நாம் எப்பொழுதெல்லாம் வாழ்க்கையில் வரும் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நமது உரிமையாளரும் தலைவருமான கடவுள் நம்மைத் தேடிவந்து மீட்பார் என்பதை இக்கதை நமக்குப் படிப்பிக்கின்றது.

கோவில் என்பதன் பொருள்

இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில், "எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்" என்று கூறும் தாவீதின் வார்த்தை நம் கவனத்தை ஈர்க்கின்றது. ‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும், இருப்பார்’ என்று சொல்வார்கள். அதற்காக நாம் கோவிலுக்கு போகாமல் இருந்துவிட முடியுமா? காரணம், கோவில் என்பது கடவுள் வாழும் இல்லம். இவ்வுலகில் கோவில்களைக் கொண்டிருக்காமல் எந்தவொரு மதமும் இருக்க முடியாது. அந்தளவுக்குக் கோவில் என்பது மனித வாழ்வுடன் ஒன்றித்திருக்கின்றது. கோவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நம்பிக்கையையும், பெருமகிழ்வையும் அளிக்கும் இடமாக உள்ளது. இதனால்தான், “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நம் முன்னவர்கள் கூறியுள்ளனர். மேலும் தமிழ்ப் பண்பாட்டைக் கோயில் பண்பாடு (Temple Culture) என்று குறிப்பிடும் அளவுக்குக் கோயிலும் வழிபாடும் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமானவையாக அமைந்திருக்கின்றன. இவை குறித்த பல செய்திகளைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன.

சமய நிறுவனங்களாகக் கோயில்கள் விளங்கின. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலேயே கோயில்கள் பல இருந்தன. 'கோயில் அல்லது மந்திர் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந்நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் ‘கோ + இல்’ எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே ‘கோ’ என்பது இறைவனையும், ‘இல்’ என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கிறது. எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. ஆலயம் என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்" அதாவது, "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டுள்ளது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக்கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன. (நன்றி தமிழ் விக்கிபீடியா).

எருசலேம் கோவில்

தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களை ஆட்சிசெய்த காலத்தில் கடவுளுக்கு கோவில் ஒன்றைக் கட்ட விரும்பினார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்படவில்லை, மாறாக, அவருடைய மகன் சாலமோனுக்குத்தான் வழங்கப்பட்டது. எருசலேம் கோவிலின் வரலாறு மிகவும் சுவையானது மற்றும் சிக்கலானது. எருசலேம் திருக்கோவிலைக் கட்டிமுடிக்க சாலமோன் அரசர் 7 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக திருவிவிலியம் மொழிகிறது (காண்க. 1 அர 6:37-38) ஆனால் இதனைக் கட்டிமுடிக்க 46 ஆண்டுகள் ஆனதாகவும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியபோது, யூதர்களிடம்,  “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்று கூறுகின்றார். அப்போது அவர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்கிறார்கள் (காண்க. யோவா 2:19-20). ஆனால் இந்த நாற்பத்தாறு ஆண்டுகள் என்பது இஸ்ரயேல் மக்கள் வேற்று நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்ட நிலையில், அவர்கள் திரும்பிவந்து சிதிலமடைந்திருத்த எருசலேம் கோவிலை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் காட்டியெழுப்பினர். இதனை எல்லாம் மொத்தமாகக் கணக்கிடும்போதுதான், எருசலேம் கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட 46 ஆண்டுகள் ஆனதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த கடவுளும் தான் அதிகம் கோவிலில் இருக்க விரும்பினார். ஆகவேதான் கோவில் என்பது அன்றும் இன்றும் கடவுளுக்கு மிகவும் பிடித்த இடமாகவே இருந்து வருகின்றது. சாலமோன் அரசர் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின், ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக்  காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார். அப்போது ஆண்டவர் அவரிடம் சொன்னது: “என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும் (1 அர 9:1-3) என்று கூறுகின்றார். ஆகவேதான், இன்றுவரை எருசலேம் கோவில் ஒவ்வொரு யூதரின் இதயமாக விளங்கி வருகின்றது என்பதையும் பார்க்கின்றோம். மேலும் "என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது என்றும், வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது” (திபா 84:2, 10) என்றும் தாவீது தனது 82-வது திருப்பாடலில் உரைக்கின்றார்.

இறுதியாக, "என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்" என்ற தாவீதின் வார்த்தைகள் அவரது இறையச்சத்தையும், நேர்மையான உள்ளத்தையும்  எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, கடவுள் நமது குரலுக்குச் செவிசாய்க்குமாறு தாவீதின் இத்தகைய மனநிலையைக் கொண்டிருப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 பிப்ரவரி 2025, 12:56