MAP

இறைவேண்டல் இறைவேண்டல்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 66-1, நற்செயல்களே தீமையை வெல்லும்!

தீமையை நன்மையால் மட்டுமே வெல்ல முடியும். இங்கே நன்மை என்பது நற்செயல்கள் செய்வதை மட்டுமல்ல கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதையும் குறிக்கிறது.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 66-1, நற்செயல்களே தீமையை வெல்லும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இயற்கையைப் பேணுவோம்!’ என்ற தலைப்பில் 65-வது திருப்பாடலில் 9 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 66-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். கடந்த திருப்பாடலைப் போலவே, இதுவும் 'நன்றிப் புகழ்ப்பா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இத்திருப்பாடலில் மொத்தம் 20 இறைவார்த்தைகள் உள்ளன.  இது ஒரு நன்றி திருப்பாடல். இது மிகவும் பொதுவான பயன்பாடாக அமைந்துள்ளது. இத்திருப்பாடல் எந்தவொரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. காரணம் இது ஒரு புகழ்ச்சிப்பா. எல்லா மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ இங்கே அழைக்கப்படுகிறார்கள். இத்திருப்பாடல் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில், முழு படைப்பிலும் அவருடைய இறையாண்மை மற்றும் வல்லமையின் பொதுவான நிகழ்வுகளுக்கு புகழ்பாடப்படுகிறது (வ. 1-7). இரண்டாவது பகுதியில், கடவுள் மக்களுக்கு ஆற்றிவரும் வியப்புக்குரிய செயல்களுக்காக புகழ்ச்சிப்பா இசைக்கப்படுகிறது (வச. 8-12). மூன்றாவது பகுதியில், தனது இறைவேண்டல்களுக்கு கடவுள் பதில் அளித்ததற்காகவும், அவரது நன்மைத்தனங்களின் அனுபவங்களுக்காகவும் அவரைப் புகழ்ந்தேத்துகிறார் தாவீது. குறிப்பாக, கடந்த காலங்களிலும் நவீன காலங்களிலும், பொதுவான மற்றும் தனிப்பட்ட கடவுளின் இரக்கத்திற்காக நன்றி செலுத்த நாம் ஒவ்வொரு விடயத்திலும் கற்றுக்கொண்டால், இந்தத் திருப்பாடலை எவ்வாறு அருளுடனும் புரிதலுடனும் பாடுவது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். இப்போது இத்திருப்பாடலில் 1 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை பக்தியுடன் வாசிப்போம். ‘அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்; அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக!’ (வச. 1-7)

இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில், "கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்" என்று அனைத்துலக மக்களிடம் தாவீது கூறுவது எடுத்துக்காட்டப்படுகிறது. இங்கே, ‘கடவுளின் செயல்கள் அஞ்சத்தக்கவை’ என்று கூறும்போது, ‘கடவுள் எப்போதும் நம்மைப் பயமுறுத்துக்கூடியவர்’ என்று நாம் தவறாகப் பொருள்கொள்ளக் கூடாது. அதேவேளையில், தீயோரை, கடவுள் அழித்தொழிக்கக்கூடியவர் என்பதையும் இவ்வுலக மனிதர் நீதி வழங்கத் தவறினாலும் கடவுள் எப்போதும் அநீதிகள் இழைக்கப்பட்டோருக்கு ஆதரவாக நீதி வழங்குகிறார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் அவர் இவ்வாறு கூறுகிறன்றார். சிலவேளைகளில் தவறிழைத்தவர்கள், தீங்கு நினைத்தவர்கள், கொடிய செயல்களை அரங்கேற்றியவர்கள் யாவரும் தங்கள் செயல்களுக்குத் தக்க தண்டனையைப் பெறும்போது, “கடவுள் ஒருத்தர் இருக்காருடா... அவரு பார்வையிலிருந்து எவனும் தப்பிக்கவே முடியாது” என்று சொல்லுவோமல்லவா அதுதான் இது. முதல் திருப்பாடலில், பொல்லார் நல்லார் குறித்துப் பேசும் தாவீது, நல்லாரை நற்பேறு பெற்றவர் என்றும், பொல்லாரை காற்று அடித்துச் செல்லும்  பதரைப்போன்றவர்கள் என்றும் அழைக்கிறார் (காண்க. திபா 1:4-5). மேலும், “மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” (காண்க திபா 47:1-7) என்று உரைக்கின்றார். ஆக, நாம் தீச்செயல்கள் செய்யும்போது கடவுள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார், மாறாக, அவர் நம்மைத் தண்டிக்கக்கூடியவர் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அப்போதுதான் இறையச்சம் கொண்டவர்களாக நமது செயல்களை நேரிய உள்ளமுடன் செய்ய முடியும் என்பதையும் நம் மனங்களில் நிறுத்துவோம்.

அது ஓர் அழகான அரண்மனை. அங்கே ஒரு மூலையில் குருவியொன்று கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தது. ஒருநாள் அந்தக் குருவிக்கு குஞ்சு ஒன்று பிறந்தது. அதே நாளில் மன்னருக்கும் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையும் குருவிக் குஞ்சும் ஒருசேர வளர்ந்தன. மன்னரின் மகன் ஒருநாள் குருவிக் குஞ்சுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு கோபம் ஏற்பட்டு அந்தக் குருவிக் குஞ்சின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டான். இதைக்கண்ட தாய்ப்பறவைக்குக் கோபம் கொப்பளித்தது. உடனே அது பாய்ந்து சென்று மன்னர் மகனின் கண்களைக் கொத்தி குருடாக்கிவிட்டது. அப்போது மன்னர் குருவியைச் சந்தித்து. "சரி ஒரு குற்றம் நடந்து அதற்கான தண்டனையும் கிடைத்துவிட்டது. இனி நடந்ததை மறந்துவிட்டு நாம் சமாதானமாகப் போய்விடலாம்" என்று கூறி சமரச திட்டம் ஒன்றை முன்வைத்தார். அப்போது அந்தத் தாய்க்குருவி, “மன்னா, உன் மகன் என் மகனுக்குத் தீங்கிழைத்தான். அதற்கு நான் தக்கதொரு பாடத்தை அவனுக்குக் கற்பித்தேன். ஒரு சமயம் ஒருவனுக்குக் கெடுதல் செய்துவிட்டு, இன்னொரு சமயம் அவன்மீதே நம்பிக்கை வைப்பவன் இறுதியில் கண்டிப்பாக ஏமாற்றத்தைத்தான் சந்திப்பான். ஆகவே நமக்கிடையே நடந்ததை இனி நீயோ நானோ முற்றிலும் மறந்துவிடுவது என்பது முடியாத காரியம். இனிமேல் நான் எவ்வளவுதான் உன்னிடத்தில் விசுவாசமாக நடந்துகொண்டாலும், உனக்குள் ஏற்பட்டுவிட்ட பகையுணர்வு ஒருபோதும் மறையாது. அதேமாதிரி நீ எவ்வளவுதான் என்னிடம் நல்லவனாக நடந்துகொண்டாலும், உன் செயல்பாடுகளில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே, இனி இந்த இடத்தில் தங்குவது எனக்கு நல்லதல்ல. தீங்கு செய்தோர் இடத்தில் திரும்பவும் ஆதரவையும் அன்பையும் நாடக்கூடாது. நான் போகிறேன்" என்று கூறிவிட்டு அந்தக் தாய்க்குருவி பறந்தோடிவிட்டது. அப்போது குனிந்து நின்ற மன்னருக்கு, ஒரு சண்டையை நிறுத்துவதற்கு அதைத் தொடங்காமலே இருந்துவிடுவதுதான் நல்லது என்ற ஓர் உண்மைப் புரிந்தது.

இரண்டாவதாக, "அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்!" என்ற வார்த்தைகள் குறித்து சிந்திப்போம். இங்கே இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் செங்கடலைக் கடந்து சென்றதை  நினைவுகூர்கின்றார் தாவீது. ‘மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்’ (காண்க. விப 14:21-22) மற்றும், 'இவ்வாறு, ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும், அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்' (வச 30-31) என்ற இறைவார்த்தைகள் தாவீது அரசரின் மனத்தைக் தொட்டிருக்க வேண்டும். அதனால்தான் செங்கடல் இரண்டாகப் பிரிந்த இந்த நிகழ்வை இங்கே அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதியாக, "அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக!" என்று உரைக்கின்றார் தாவீது. பொதுவாக, ஒருவரின் உள்ளத்தில் தீய எண்ணங்கள் ஊற்றெடுக்கும்போது அவை கலகங்களைத் தோற்றுவிக்கின்றன. இது சில வேளைகளில் பலருடைய உள்ளங்களில் இருந்து எழக்கூடியவைகளாகவும் இருக்கலாம். நன்மையும் தீமையும் ஒரே உறைக்குள் இருக்க முடியாது. தீமை இருக்கும் இடத்தில நன்மை இருக்காது, நன்மை இருக்கும் இடத்தில தீமை இருக்காது. பல நேரங்களில் நாம் தீமையையோ அல்லது தீமை செய்வோரையோ காணும்போது, அந்த நபரிடமிருந்தோ அல்லது, அந்தச் சூழலில் இருந்தோ அகன்றுபோய்விடுவது சாலச் சிறந்தது. இதனால்தான், 'துஷ்டரைக் கண்டால் தூர விலகு' என்று நம் முன்னவர்கள் கூறியுள்ளனர்.

இங்கே முக்கியமான ஒன்றையும் நம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, நாம் வாழும் எல்லா இடங்களிலும் தீயவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதனால் அவர்களைவிட்டு நாம் ஓடிக்கொண்டே இருக்கவும் முடியாது. பலவேளைகளில் அவர்களுடன் இணைந்து வாழத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக, அத்தீயவர்களைக் கடவுளின் கரங்களில் விட்டுவிட்டு நாம் நல்லவர்களாக, நன்மையை மட்டுமே செய்யக் கூடியவர்களாக வாழ வேண்டும். தீமையை நன்மையால் மட்டுமே வெல்ல முடியும். இங்கே நன்மை என்பது நற்செயல்கள் செய்வதை மட்டுமல்ல, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதையும் குறிக்கிறது. இதனை நமது அன்றாட வாழ்வில் செயல்படுத்திட இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2025, 10:03