MAP

அமைதிக்காக உழைக்கும் Pax Christi அமைதிக்காக உழைக்கும் Pax Christi   (ANSA)

ஏழைகளுக்கான நிதியில் ஆயுத முதலீட்டை அதிகரிப்பது வெட்கக்கேடானது

இராணுவச் செலவுகளை மேலும் 2.5 விழுக்காடு அதிகரிக்க, வெளிநாடுகளுக்கான உதவிகளை 40 விழுக்காடு குறைக்க பிரிட்டானிய அரசு முன்வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிரிட்டனின் ஆயுதச் செலவுகளை அதிகரிப்பதன் காரணமாக அந்நாடு வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த உதவித் தொகைகளைக் குறைக்க முடிவெடுத்துள்ளது வெட்கக் கேடானது, அதிர்ச்சியூட்டுவது மற்றும் நம்மை நாமே வீழ்ச்சிக்குத் தள்ளுவது என கவலையை வெளியிட்டுள்ளது Pax Christi அமைதி இயக்கம்.  

உலகின் அமைதிக்காக அயராது உழைத்துவரும்  கத்தோலிக்க இயக்கமான Pax Christi அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்நோக்கின் இந்த யூபிலி ஆண்டில் அமைதிக்காக உழைக்கும் நாம் அனைவரும் வெளிநாட்டு உதவிகளை குறைக்கும் பிரிட்டானிய அரசின் செயலுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் இராணுவச் செலவுகளை மேலும் 2.5 விழுக்காடு அதிகரிக்கவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கான உதவிகளை 40 விழுக்காடு குறைக்க பிரிட்டானிய அரசு முன்வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக்கூறும் Pax Christi கத்தோலிக்க இயக்கம், அமைதியை ஆயுதங்களால் வாங்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாக காசா, சிரியா, உக்ரைன் ஆகியவைகளின் மக்கள் சமுதாயங்கள்மீது நம் முதலீடு இருக்க வேண்டுமேயொழிய ஆயுதங்கள் மீதல்ல எனவும் கூறியுள்ளது.

ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிக்க உதவுவதை விடுத்து கல்வி, நல ஆதரவு, உறைவிடம், நிலையான தன்மைகள் போன்றவற்றிற்கு உதவி, வன்முறை, ஏழ்மை, மற்றும் அநீதிகளை  இவ்வுலகிலிருந்து அகற்றுவதே நம் கடமையாக இருக்க வேண்டும் என மேலும் அழைப்புவிடுத்துள்ளது Pax Christi கத்தோலிக்க அமைதி இயக்கம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 பிப்ரவரி 2025, 15:40