அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதையில் செல்வோம் - பேராயர் மார்க்கோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
வன்முறை மரணத்தையும் அழிவையும் மட்டுமே தருகிறது, அது எப்போதும் ஒரு தோல்வி தான், எனவே, இத்துன்பத்தில் இருந்து எழுந்திருக்க முயல்வோம் என்றும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை விட்டு விட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதையில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் பேராயர் மார்க்கோ டின் வின்.
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமையன்று மண்டலே மறைமாவட்டத்தில் உள்ள தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் அடையாளம் தெரியாத வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த அருள்பணியாளர் டொனால்ட் மார்ட்டீன் அவர்களது இறுதிச்சடங்குத் திருப்பலியில் பங்கேற்று, உரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் மண்டலே உயர் மறைமாவட்டப் பேராயர் மார்கோ டின் வின்.
இறுதிச்சடங்குத் திருப்பலியானது அருள்பணியாளர் டொனால்ட் பிறந்த ஊரான Pyin Oo Lwin என்னும் மலை கிராமத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய 5000க்கும் மேற்பட்ட இறைமக்கள் பங்கேற்ற இத்திருப்பலில் மியான்மார் ஆயர்பேரவைத் தலைவர் கர்தினால் சார்லஸ் முவாங் போ அவர்கள் அனுப்பிய இரங்கல் செய்தியானது, பேராயர் மார்கோ டின் வின் அவர்களால் வாசிக்கப்பட்டது.
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை மியான்மாரின் மண்டலே மறைமாவட்டத்தில் உள்ள தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் அருள்பணியாளர் டொனால்ட் மார்ட்டீன் அவர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூரில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது பீதேஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனம்.
அண்மையில் நடைபெற்ற அருள்பணியாளர் மார்ட்டீன் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியில் ஏறக்குறைய 5000 மக்கள் கலந்துகொண்டு அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.
மியான்மார் அருள்பணியாளர் டொனால்ட் மார்ட்டீன் அவர்களைக் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்த வன்முறையாளர்கள் என்ற அடிப்படையில் Kan Gyi Taw என்ற கிராமத்தைச் சார்ந்த 10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாகவும், உள்நாட்டு மோதல், வன்முறை மற்றும் இடப்பெயர்தலைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் மண்டலே பகுதியில் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்