இலண்டனில் உக்ரைன் மீதான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 25, இச்செவ்வாயன்று, உக்ரைன்மீதான இரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், அங்குத் தொடர்ந்து அமைதி நிலவிடவும், அனைத்து மதச் செபக் கூட்டம் ஒன்று இலண்டனில் உள்ள உக்ரேனிய கத்தோலிக்கப் பேராலயத்தில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது ICN செய்தி நிறுவனம்.
சூரியகாந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இப்பேராலயத்தில் வெளியுறவுச் செயலர் டேம் பிரிதி படேல் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மேயர் இராபர்ட் ரிக்பி போன்ற அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் என்றும் உரையாகிறது அச்செய்தி நிறுவனம்.
இந்த இறைவேண்டல் கூட்டம் இறுதியில் ஓர் ஊர்வலதுடன் நிறைவுபெற்றது என்றும், அதில் பாடல்கள் மற்றும் அமைதிக்கான செபங்கள் இடம்பெற்றன என்றும் கூறுகிறது அச்செய்தித் தொகுப்பு.
மேலும் இக்கூட்டத்தில் லிவ் நகரைச் சேர்ந்த உக்ரேனிய அருள்பணியாளர் தாராஸ் மைகல்சுக் அவர்கள் சாட்சியுரை வழங்கினார் என்றும், தொடர்ந்து உக்ரைனின் ஆன்மிகக் கீதம் மற்றும் "கடவுள் அரசரைக் காப்பாற்றுகிறார்" என்ற பாடலுடன் அது நிறைவுற்றது என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
உக்ரேனிய கத்தோலிக்க மறையாட்சி வட்டத்தின் தலைவரான ஆயர் கென்னத் நோவகோவ்ஸ்கி, உக்ரைனுடனான இங்கிலாந்தின் ஆதரவு மற்றும் ஒன்றிப்புக்கு நன்றி தெரிவித்தார் என்றும், அந்நாட்டிற்கான உக்ரேனியத் தூதர் வலேரி ஜலுஷ்னி அவர்கள், உக்ரைனுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளித்து வரும் இங்கிலாந்தின் உதவிக்கு நன்றி தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் உக்ரேனியர்களுக்கான உலக அமைப்பின் தலைவரான பால் க்ரோட் அவர்கள், முன் பதிவு செய்யப்பட்ட அவரது உரையில், உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டித்தார் என்றும், அதன் தாக்குதலுக்கு எதிராகத் தொடர்ந்து உலகளாவிய ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்தார் என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் தொகுப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்