MAP

கென்ய ஆயர்கள் கென்ய ஆயர்கள் 

நாட்டை மாற்றுவதற்கான கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தும் கென்ய ஆயர்கள்!

கென்யாவின் கத்தோலிக்க ஆயர்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதியான, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்புவது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்பதை நினைவூட்டியுள்ளதுடன், ஒவ்வொரு குடிமகனும் தனது பங்கை ஆற்றும் வகையில் நாட்டில் மாற்றத்தைக் கொணர்வதற்குப் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இவ்வாண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி தொடங்கும் தவக்காலத்திற்கு முன்னதாக, கென்ய சமூகத்தை மாற்றியமைப்பதில் தங்கள் பங்கைப் பற்றி சிந்திக்க கிறித்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.

இதுகுறித்துக் கூறியுள்ள ஆயர் சைமன் பீட்டர் காமோமோ அவர்கள், "'நாங்கள் விரும்பும் கென்யா' என்பதே இத்தவ நாள்களின் கருப்பொருள்" என்றும், "சமத்துவம், நீதி மற்றும் அனைத்து மக்களுக்கும் இரக்கம் என்பதன் அடிப்படையில், கிறிஸ்தவர்கள் தங்கள் நலனை மட்டுமல்ல, மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்துவது, ஊழல் மற்றும் அநீதிகளை எதிர்கொள்வது மற்றும் பணியிடங்கள், அரசியல் மற்றும் குடும்பங்கள் போன்ற பல்வேறு துறைகளில் நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு,  நீதியான மற்றும் ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான முக்கியத்துவத்தையும் கென்ய ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக, நீதி, அமைதி, ஒன்றிப்பு மற்றும் நேர்மையுடன் கூடிய தலைமைத்துவம் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப அதன் மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ள ஆயர்கள், இந்தத் தவக்காலத்தில், கத்தோலிக்கர்கள் குடும்ப ஒற்றுமை, ஊழல், இளையோர் முன்னேற்றம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விடயங்களைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் உரைத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2025, 13:24