திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 17
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை, தந்தைக் கடவுளுக்கு இணையான அவரது இயல்பு ஆகியவை மறுக்கப்பட்டதால், அதனைக் கடுமையாக எதிர்த்து, ஒற்றுமையைப் பாதுகாக்கும் பணியை நிசேயா திருச்சங்கமானது கொண்டிருந்தது. 325 - ஆம் ஆண்டு மே 20, அன்று பேரரசர் கான்ஸ்டன்டைனின் அழைப்பின் பேரில் பேரரசரின் அரண்மனையில் ஏறக்குறைய முந்நூறு ஆயர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, அனைவரும், தூயஆவியின் அருளால், ஞாயிற்றுக்கிழமை நற்கருணை கொண்டாட்டத்தில் இன்றும் நாம் கூறும் நம்பிக்கை அறிக்கையில் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். திருஅவைச்சங்கத்தின் தந்தையர்கள் நம்பிக்கை அறிக்கையில் முதன்முறையாக "நாங்கள் நம்புகிறோம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தித் தொடங்க விரும்பினர். "நாங்கள்" என்பதில் அனைத்து ஆலயங்களும் தங்களை ஒற்றுமையைக் கண்டனர். அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே நம்பிக்கையை வெளிப்படுத்தினர் என்பதற்கு சான்றாக அது அமைந்தது நம்பிக்கை அறிக்கை.
நிசேயா திருச்சங்கம் திருஅவை வரலாற்றில் ஒரு மைல்கல். அதன் ஆண்டுவிழாவானது கிறிஸ்தவர்களை தூய தமத்திரித்துவத்திற்கும், அன்பின் மறைபொருளை நமக்கு வெளிப்படுத்திய இறைத்தந்தையைப் போன்ற கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவிற்குப் புகழ் பாடுவதிலும் நன்றி செலுத்துவதிலும் ஒன்றுபட அழைக்கிறது. நிசேயா திருச்சங்கம் அனைத்து தலத்திருஅவைகள் மற்றும் திருஅவை சமூகங்களுக்கும், "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். (யோவான் 17:21) என்ற இயேசுவின் செபத்திற்கு முழுமையாக ஒத்துப்போகும் பொருத்தமான வடிவங்களைத் தேடுவதில் சோர்வடையாமல், காணக்கூடிய ஒற்றுமையை நோக்கிய பாதையில் தொடர ஒரு அழைப்பையும் விடுத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்