MAP

புலம்பெயர்ந்தோர் ஆணைய மறைமாவட்டச் செயலாளர்கள் உடன் கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ புலம்பெயர்ந்தோர் ஆணைய மறைமாவட்டச் செயலாளர்கள் உடன் கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ 

எதிர்நோக்கின் அடையாளங்களாகத் திருஅவையின் உறுப்பினர்கள் மாற வேண்டும்

பிப்ரவரி 20 மற்றும் 21 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவாவில் உள்ள சாந்தி சதன் மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் புலம்பெயர்ந்தோர் ஆணைய மறைமாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவின் புறநகர்ப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிர்நோக்கின் அடையாளங்களாகக் கட்டாயம் மாற வேண்டும் என்று கூறினார் கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ.

பிப்ரவரி 20 மற்றும் 21 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவாவில் உள்ள சாந்தி சதன் மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் புலம்பெயர்ந்தோர் ஆணைய மறைமாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்போது இவ்வாறு எடுத்துரைத்தார், கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயராரும், CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ.

யூபிலி ஆண்டிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணை மடலில் வலியுறுத்தியுள்ள கருத்துக்களுள் ஒன்றான, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் ஃபெராவோ அவர்கள், வயதானவர்கள், நோயாளர்கள், தேவையிலிருப்பவர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழ்பவர்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

புனித பிரான்சிஸ் சேவியர், புனித ஜோசப் வாஸ் ஆகியோரின் வாழ்க்கையானது உறவுகளை வளர்ப்பதற்கான மாதிரிகள் என்றும், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான மேய்ப்புப் பணிப் பராமரிப்பின் அடித்தளம் என்றும் எடுத்துரைத்த கர்தினால் ஃபெராவோ அவர்கள், உறவுகள் வழியாகவே பராமரித்தலும் ஆற்றல் அதிகாரமளித்தலும் நிகழ்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

இந்திய மறைப்பணியாளராகிய புனித பிரான்சிஸ் சேவியர், இலங்கை மறைப்பணியாளராகிய புனித ஜோசப் வாஸ் ஆகிய இருவரும், இந்த யூபிலி ஆண்டில் புலம்பெயர்ந்தோர் பணிக்கு அடையாளமாக இருக்கின்றனர் என்றும், ஒரு முக்கிய திறமையான தொடர்பு வழியாக மக்களுடன் தங்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் ஃபெராவோ.

பிப்ரவரி 20-21 வரை நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில், பல்வேறு மறைமாவட்டங்கள், துறவற சபைகள் மற்றும் CCBI புலம்பெயர்ந்தோர் ஆணைய உறுப்பினர்கள் என ஏறக்குறைய 25 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களை வாழ்வாதாரம் மற்றும் உணவு தேடி இடம்பெயர கட்டாயப்படுத்தும் சமூக-அரசியல் யதார்த்தங்கள் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்திய இக்கூட்டத்தில், புலம்பெயர்ந்தோர், குறிப்பாக தொழிலாளர் புலம்பெயர்ந்தோர் பற்றிய விரிவான தரவுகள் இல்லாததைப் பற்றியும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்றல்,பாதுகாத்தல், ஊக்குவித்தல், ஒருங்கிணைப்பது போன்ற கொள்கைகள் குறித்து சமூகங்களிடையே அதிக விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்திய பங்கேற்பாளர்கள், புலம்பெயர்ந்தோரின் பெற்றோர், வேலைநிமித்தமாக இடம்பெயரும்போது அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் பருவகால விடுதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான பிற நலத்திட்டங்கள் போன்ற அரசாங்க முயற்சிகளையும் பாராட்டினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 பிப்ரவரி 2025, 13:21