MAP

இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவப் பெண் இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவப் பெண்   (AFP or licensors)

அருணாச்சலப் பிரதேசத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் கிறிஸ்தவர்கள்!

அருணாச்சலப் பிரதேசத்தில், ஆளும் பா.ஜ.க அரசு பூர்வகுடி இன மக்களின் மத நம்பிக்கை நடைமுறைகளைப் பாதுகாக்க 1978-ஆம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்த உள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், ஆளும் பா.ஜ.க அரசு மதமாற்றத் தடைச்சட்டத்தை திணிக்கும் முயற்சிக்கு எதிராக அம்மாநில கிறிஸ்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

மாநில அரசின் இம்முயற்சி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, பிப்ரவரி 17, இத்திங்களன்று, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கிறிஸ்தவர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்று உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

அருணாச்சல பிரதேச மதச் சுதந்திர சட்டம் (APFRA) 1978-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய மத நடைமுறைகளை வெளிப்புறத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் என்றும், ஆனால், ஆட்சிக்கு வந்த அரசுகள் விதிகளை உருவாக்கத் தவறியதால், 45 ஆண்டுகளுக்கும் மேலாக அது கிடப்பில் போடப்பட்டு இருந்தது என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி, அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் இட்டா நகரில் உள்ள கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நடுவர் ஆயம், ஆறு மாதங்களுக்குள் விதிகளை இறுதி செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டது என்றும், அரசின்  சட்டத்தை அமல்படுத்தத் தவறியதற்கு எதிராக குடிமகன் ஒருவரின் பொது நல வழக்குக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இச்சூழலில், பிப்ரவரி 15, சனிக்கிழமையன்று, முதல்வர் Pema Khandu அவர்கள், “நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட விதிகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, ஆனால் பூர்வகுடி மக்களின் மத நம்பிக்கைகளுக்கு இன்னும் சில பாதுகாப்பை வழங்குவதற்காகத்தான் இந்த நடவடிக்கை" என்று கூறியதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

அதேவேளையில், அருணாச்சல கிறிஸ்தவ அமைப்பு (ACF) "இந்தக் கடுமையான சட்டம் நமது நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பிற்கும் கிறிஸ்தவத்திற்கும் எதிரானது" என்று இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்திக் குறிப்பு.

இட்டா நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்த கிறிஸ்தவ அமைப்பு (ACF), இந்த வாரம் முழுவதும், மாநிலத்தின் 29 மாவட்டங்களில் அரசின் இந்த மதமாற்றத் தடைச்சட்டத்திற்கு எதிராக, கிறிஸ்தவர்கள் போராட்டங்களை நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2025, 12:58