தடம் தந்த தகைமை – அசேராக் கம்பங்களை நெருப்பிலிட்ட அரசன் யோசியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாம் பெத்தேலில் எழுப்பியிருந்த தொழுகை மேட்டையும் அதன் பலிபீடத்தையும், அவர் தகர்த்துத் தீக்கிரையாக்கினார் அரசர் யோசியா. அசேராவைத் தூள்தூளாக்கி நெருப்பிலிட்டார். யோசியா திரும்பிப்பார்த்தபோது, அங்கு மலையின்மேல் கல்லறைகள் இருக்கக் கண்டார். அவர் ஆளனுப்பி அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவந்து, கடவுளின் அடியவர் உரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க, அவற்றைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து மாசுபடுத்தினார். பின்பு அவர், “அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது?” என்று கேட்டார். அந்நகர மக்கள், “அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான்” என்றனர்.
அதற்கு அவர், “அப்படியே இருக்கட்டும். அவருடைய எலும்புகளை ஒருவனும் தொடவேண்டாம்” என்றார். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியவைச் சார்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் அங்கேயே விட்டு வைத்தனர். ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார். அவர் அங்கிருந்த தொழுகைமேடுகளின் அர்ச்சகர் அனைவரையும் பலிபீடங்களின்மேல் கொன்றார். அப்பலிபீடங்களின்மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தபின், அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்