தடம் தந்த தகைமை - தம் பிள்ளையோ மாடோ......
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?....உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா? (லூக் 14:3,5), என திருச்சட்ட அறிஞரிடமும் பரிசேயரிடமும் கேட்டார் இயேசு.
ஓய்வு நாள்; மனிதாபிமானத்தை முன்னிறுத்தி, கடினமாக உழைத்த உழைப்பாளரின் நலன் காக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. காலவட்டத்தில் அது சட்டதிட்டத்திற்குட்பட்ட புனித நாளாகப் புனையப்பட்டது. படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். எனவே நாமும் எவ்வேலைக்கும் இடம் கொடாமல் ஓய்ந்திருக்க வேண்டும் எனத் திணிக்கப்பட்டது. அதன் வழியாக கடவுளை முழுநாளும் நினைந்து அவரது புனித ஓய்வில் பங்கேற்கிறோம் என்றக் கருத்தும் புகுத்தப்பட்டது.
சட்டங்கள் சமூகத்தின் ஆக்கப்பூர்வ வேலைகளுக்கானவை. ஆனால் அதைவிடுத்து அழிவிற்கும், அநாகரிகத்திற்கும், அடக்கி ஆள்வதற்கும் திருச்சட்ட அறிஞர்களால் அவை பயன்படுத்தப்பட்டு வந்தன. அவர்களது இறுகிய, சட்ட மையப் பார்வையை இயேசு கேள்விக்குட்படுத்தினார். அப்பார்வையை நீர்த்துப்போகச் செய்யவே நீர்க்கோவை நோயாளரைத் தொட்டு நலப்படுத்தினார். இன்றும் சட்டத்தை முன்னிலைப்படுத்தி மனிதத்தைப் பின்னிலைப்படுத்தும் பிற்போக்குப் பார்வைகள் இயேசுவுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்! சட்டமும் மருந்தும் நம் தேவைக்கேற்பவே.
இறைவா! நீர் நேயங்களின் நேசர். உம் நேயப் பார்வையிலே என் கால்கள் பயணிக்க பலம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்