தடம் தந்த தகைமை - நம்புவோர் நிலைவாழ்வைக் கொள்வர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள், (யோவா 5:24) என்றார் இயேசு.
உலகில் பல சிக்கல்கள் செவிமடுத்தலின்மையாலே உருவெடுத்துள்ளன. சில நேரங்களில் செவிமடுத்தாலும் அதைப் புரியாத மனநிலையும், அவ்வாறே புரிந்து கொண்டாலும் ஏற்றுச் செயலாற்றும் உள்ளுணர்வு இல்லா அவலமுமே நிலைபெறுகின்றன. யூதர்கள் இயேசுவை எதிர்த்தனர் என்றால் அவரது வார்த்தையை ஏற்கவோ, எதார்த்த வாழ்வைப் பார்க்கவோ விரும்பவில்லை, துணியவுமில்லை. அது அவர்களுள் நம்பிக்கையின்மையை விதைத்தது.
அழியா வாழ்வுக்கு அடித்தளம் நல்ல மனநிலை. அதனை இழந்துவிட்டோமெனில் எல்லாம் இழந்ததற்கு ஒப்பாகும். இன்று பொருட்களுக்கும் சேவைக்கும் வரி மதிப்புக் கூட்டப்பட்டுள்ளது. ஆனால் மனிதருக்கான மதிப்பு என்பது கேள்வியாகியுள்ளது. நற்சிந்தனைகளை உள்வாங்கி, நல்லுணர்வில் திளைத்து, நற்செயல்களில் நிலைப்போர்,
இயேசுவில் சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்ட மனிதக் குழுமத்தின் அர்ப்பண அங்கங்கள். அறிஞர்களிடமிருந்து கேட்டுப் பெறும் நல்ல செய்திகள் நல்ல செல்வமாகும்.
இறைவா! பிறரைப் புரிதலிலும், நற்செயல்கள் புரிதலிலும் இருந்து என்னைப் பிரித்திடாத நல்லுள்ளத்தைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்