MAP

தன் சீடர்களுடன் இயேசு தன் சீடர்களுடன் இயேசு 

தடம் தந்த தகைமை - உம் மகன் பிழைத்துக் கொள்வான்

“நீங்கள் உண்மையாக நம்புவது எப்போதாவது நடந்தே தீரும்” என்பார் உளவியலாளர் பிராங்க் லாய்டு. நாம் நதி போல நம்பிக்கையுடன் நகர்ந்தால் எங்கேனும் நமக்கென வெற்றி காத்திருக்கும் கடலாக.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் என இயேசுவை நோக்கி வேண்டினார் அரச அலுவலர். இயேசுவோ, நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான், என பதிலளித்தார். (யோவா 4:49-50)

“நீங்கள் உண்மையாக நம்புவது எப்போதாவது நடந்தே தீரும்” என்பார் உளவியலாளர் பிராங்க் லாய்டு. அரச அலுவலர் இயேசுவை நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை நிறைவேறுமா என்ற அச்சத்தின் அழைப்பே “என் மகன் இறக்குமுன் வாரும்”.  ஒருவேளை இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு நடந்தே கப்பர்நாகூம் வந்து சேர நாழிகைகள் பல ஆகலாம். அதற்குமுன் தன் மகனுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்…! நம் ஒட்டுமொத்த நினைவகமே நம் வாழ்க்கை. பல நேரங்களில் நாம் இதை மறந்துவிடுகின்றோம்.

“நீர் புறப்பட்டுப் போம்” என்ற இயேசுவின் வார்த்தை அரச அலுவலருக்கு ஒருவிதத் தெம்பைக் கொடுத்தது. ஊசலாடிய அவரது நம்பிக்கை நிலையாகி உறுதியானது. நெஞ்சிலே நம்பிக்கையைச் சுமந்து தம் இல்லம் நோக்கி நடந்தார். அவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் நம்பிக்கையின் பாதப் பதிவுகள். அதுவே “உம் மகன் பிழைத்துக் கொண்டான்” என்ற நல்ல செய்திக்கான வழியாயிற்று. நாம் நதி போல நம்பிக்கையுடன் நகர்ந்தால் எங்கேனும் நமக்கென வெற்றி காத்திருக்கும் கடலாக.

இறைவா! என்னுள் குடிவாழும் நம்பிக்கை உம்மாலும், என் உறவுகளாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட விலையில்லாப் பரிசு. அதனை இழக்காமல் வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2025, 12:09