தடம் தந்த தகைமை - கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது (மத் 6:24) என்றார் இயேசு.
கடவுள் உலகைப் படைத்தார். மனிதர் செல்வத்தைப் படைத்தார். இன்று தன் படைப்பாம் செல்வத்தை வைத்து உலகை ஆட்டிப் படைக்கின்றார் மனிதர். செல்வத்தை நம்பியே தன் செல்வாக்கை நிலைப்படுத்த விழைகின்றார். அச்செல்வமே தன்னைப் பாதுகாக்கும் என்ற போலி நம்பிக்கையில் பொழுதைக் கழிக்கின்றார். செல்வம் நமக்காகவேயன்றி நாம் செல்வத்திற்காக இல்லை என மனம் உணர மறந்து போகிறோம். இங்கே கடவுள் பின்தள்ளப்படுகிறார்.
நாம் செல்வத்தை மட்டுமே நம்பும்போது அதற்கே அடிமையாகிறோம். வாழ்வில் நாம் பெற்ற உயர்ந்த செல்வம் நம் நெஞ்சம் வாழும் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் நாயகருமான கடவுளுமே. அதனை விடுத்து இன்றிருந்து நாளை காணாமல் போகும் செல்வத்தின்மீது பற்று கொண்டு அதற்கு அடிபணிந்து வாழ்தல் மடமையும் அறிவீனமுமாகும். நன்மை தீமை பகுத்துணர்வதும், நல்லார் காட்டும் பாதையில் பயணிப்பதுமே மண்ணில் பெற்ற வாழ்வுக்கு நாம் செலுத்தும் மகத்தான நன்றி. இறை மறந்த வாழ்வு இறந்த வாழ்வு. அதை இதயமுணர்வதே ஞானம்.
இறைவா! ஒப்பற்ற செல்வம் நீரே என உம்மையே பற்றி வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்