MAP

காங்கோ குடியரசின் இராணுவ வீரர்கள் காங்கோ குடியரசின் இராணுவ வீரர்கள்  (AFP or licensors)

கொள்ளையடிக்கப்பட்ட உவிரா மறைமாவட்ட ஆயர் இல்லப் பொருள்கள்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஆயுதப் படை உடையணிந்த மூன்று வீரர்கள் பிப்ரவரி 20 வியாழன் காலை 8.30 மணிக்கு ஆயர் இல்லத்தில் நுழைந்து, வீட்டைக் கொள்ளையடித்தனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

காங்கோ ஜனராயகக் குடியரசின் உவிரா மறைமாவட்ட ஆயர் Sébastien Joseph Muyengo Mulombe அவர்கள் தங்கியிருந்த ஆயர் இல்லமானது, பிப்ரவரி 20 வியாழனன்றுக் கொள்ளையடிக்கப்பட்டதாக தெற்கு கீவு மறைமாவட்டத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று எடுத்துரைக்கின்றது.   

காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஆயுதப் படை உடையணிந்த மூன்று வீரர்கள் பிப்ரவரி 20 வியாழன் காலை 8.30 மணிக்கு ஆயர் இல்லத்தில் நுழைந்து, அங்கிருந்த அருள்பணியாளர்களான ரிக்கார்தோ முகுனின்வா, பெர்னார்ட் கலோலேரா ஆகியோருடன் ஆயர் செபாஸ்டியன் அவர்களையும் தாக்கி, கீழே தள்ளி, வீட்டுக்குள் அடைத்து வைத்து, வீட்டைக் கொள்ளையடித்தனர் என்றும் கூறினார்.

அவர்களிடமிருந்த அலைபேசி, பணம், மற்றும் வீட்டிலிருந்த பொருள்களையும் எடுத்துச்சென்று விட்டனர், என்றும் வீட்டில் இருந்த பணம், பொருள்கள் முதலானவை கொள்ளையடிக்கப்பட்டன என்றும் தெரிவித்த ஆயர் அவர்கள், கடவுளாது அருளால் உயிர் தப்பியதாகவும் குறிப்பிட்டார்.

தங்களது உயிருக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கொள்ளையர்கள் தங்களை உயிரோடு விட்டுச் சென்றதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாக எடுத்துரைத்த ஆயர் செபாஸ்டியன் அவர்கள், வீட்டில் காவலுக்கு இருந்த காவலர், சமையல் உதவியாளர் ஆகியோரை துப்பாக்கியைக் காட்டி கொள்ளையர்கள் மிரட்டியதாகவும், வந்தவர்கள் ஷிலுபா எனப்படும் கசை பகுதியினர் பேசும் மொழியில் பேசியதாகவும் எடுத்துரைத்தார்.

இயேசுவின் திரு இருதய மறைப்பணியாளர் சபை அருள்சகோதரியான இம்மானுவேல் தற்செயலாக ஆயர் இல்லத்திற்கு வந்ததால், தங்களுக்கு என்ன நடந்தது என்பதை எடுத்துரைக்க அவர்களால் முடிந்தது என்று கூறிய ஆயர் செபாஸ்டியன் அவர்கள், பிறருடன் தொடர்பு கொள்வதற்கான எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களும் அவர்களிடத்தில் இல்லை, அத்தனையும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன என்றும் எடுத்துரைத்தார்.

ஷிலுபா என்பது காங்கோ ஜனநாயகக் குடியரசின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களான மேற்கு கசாய் மற்றும் கிழக்கு கசாய் ஆகிய இடங்களில் உள்ள மக்களால் பேசப்படும் மொழியாகும். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 பிப்ரவரி 2025, 13:36