அருள்பணியாளர் மறைவிற்கு கர்தினால் போ இரங்கல் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
மியான்மாரின் மண்டலே கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் Donald Martin Ye Naing Win அவர்கள், ஆயுதமேந்திய குழுவினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும், இறந்த அருள்பணியாளரின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபிப்பதாகவும் இரங்கல் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் கர்தினால் சார்லஸ் முவாங் போ.
பிப்ரவரி 17 திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள மியான்மார் ஆயர்பேரவைத் தலைவர் கர்தினால் சார்லஸ் முவாங் போ அவர்கள், மியான்மர் முழுவதும் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவை, பேராயர் மார்கோ டின் வின், அருள்பணியாளர்கள், துறவறத்தார், மண்டலே மறைமாவட்டத்தின் இறைமக்கள், இறந்த அருள்பணியாளர் டொனால்ட் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து உயிர்களுக்கும் ஆண்டவராகிய தந்தையாம் கடவுள், துன்புறுகின்ற இதயங்களை ஆறுதல்படுத்தட்டும் என்றும், நாடு முழுவதும் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எண்ணற்ற அப்பாவி மக்களின் இரத்தமும், தியாகங்களும் ஒரு காணிக்கையாகச் செயல்படட்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் போ.
நாம் சந்தித்த இதயத்தை உடைக்கும் இந்த துயர அனுபவங்களிலிருந்து வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொண்டு, நமது உடன்பிறந்த உணர்வினை விழித்தெழச்செய்து, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று மனதார வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் போ.
அருள்பணியாளர் டொனால்ட் மார்ட்டின் யே நைங் வின் அவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு எளிதில் மறக்கக்கூடிய ஒன்றல்ல என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் போ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்