MAP

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் தாத்தா போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் தாத்தா  (ANSA)

வாரம் ஓர் அலசல் – ஜனவரி 06. போரால் பாதிக்கப்படும் குழந்தைகள்

குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே நம் விண்ணப்பம். ஆனால் மனிதனின் சுயநலக் கூற்றுக்குள் இந்த வேண்டுகோள் கருகிவிடுகிறது என்பதைத்தான் கண்டுவருகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி நினைவுகூர்கிறோம். 6ஆம் தேதியோடு அந்த நாள் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ஒன்றுமேயில்லை. போர்களும் உள்நாட்டு மோதல்களும் அவைகளின் பாதிப்புகளும் இளஞ்சிறார்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளின் ஆபத்து ஒரு கொடிய அச்சுறுத்தலாக உள்ளது என்ற உண்மை, உலகம் முழுவதும் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களின் வழி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான், அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான்.

உக்ரைனில் போர் துவங்கிய 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் பாதுகாப்பின்மை காரணமாக கல்வி நிலையங்களில் தங்கள் பெயர்களை பதிவுச் செய்த மாணவர்களுள் பாதி பேர் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மருத்துவக் கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன, அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்பதற்கு துல்லியமான விவரங்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளான கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளான போரும் என 4 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி உக்ரைன் நாட்டில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு அறிவிக்கிறது.

ஏமனை எடுத்துக் கொள்வோம். இது மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடு. ஏமனில் உள்ள எண்ணெய் வளத்தை அபகரிக்க அங்கே ஒரு உள்நாட்டு போரை உருவாக்கின இரு பணக்கார நாடுகள். அதற்கு ஆதரவாக சில நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்தன. ஏமன் போரில் ஏறக்குறைய 130,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போரின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தாலும் உணவு தட்டுப்பாடாலும் 84,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1.6 கோடி மக்கள் ஏமனில் பஞ்சத்தின் விளிம்பில் சிக்கி தவித்து வருகின்றனர். 5 வயதிற்கு கீழ் உள்ள 23 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் சுயநல இலாபத்திற்காக பணக்கார நாடுகள் இயற்கை வளங்கள் மிகுந்த ஏழை நாடுகளில் போர் சூழலை உருவாக்கி, போரிடும் இரு குழுக்களுக்கும் ஆயுதங்களை வழங்கி மக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றன. மேலும், ஒரு செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி பல இலட்சக்கனக்கான மக்களை அழித்தொழிக்கின்றன. இங்கும் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான்.

காஸா போரில் அழிக்கப்பட்ட நீர் அமைப்பு; தண்ணீர் இன்றி தவிக்கும் குழந்தைகள் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது, ஆனால் அது மாசுபட்டதாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். "காஸா பகுதியில் தற்போது ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகப்பெரிய காரணம், இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாசுப்பட்ட தண்ணீர் தான்," என்று மருத்துவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக கூற்றுபடி, காஸாவின் 67% நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. காஸாவின் நீர் உள்கட்டமைப்பு போரில் பெரிதும் சேதமடைந்துள்ளதால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகள்தான். மேலும், உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும்போது அனுமதிக்கப்பட்ட நிவாரணத்தின் அளவு மிகவும் சிறியது என்று நலப்பணியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மாசுபட்ட நீர் ஆகியவற்றால் இந்தச் சூழல் கடுமையான விளைவை ஏற்படுத்தி வருகிறது. "பாட்டில் தண்ணீர் கிடைப்பதில்லை. குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள் - கிடைக்கும் தண்ணீரும் அசுத்தமாக எங்களை வந்தடைகிறது," என்றுதான் அனைவரும் கூறி வருகின்றனர்.

உணவு மற்றும் தண்ணீருக்கானத் தேவை காஸாவில் அதிகரித்துள்ளதால், அவை கொள்ளையடிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்களால் நிவாரண சரக்கு வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்,  பஞ்சத்தை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளதையும் நாம் இங்கு மறுக்க முடியாது.

அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களை கொஞ்சம் உற்று நோக்குவோம். சிரியாவிலிருந்து வரும் தகவல்களின்படி, அந்நாட்டில் 1கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், மற்றும், 1 கோடியே 60 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்து உள்ளனர்.

சிரியாவிலிருந்து மக்கள் அகதிகளாக, இலெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்து மற்றும் வட ஆப்ரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவில் ஏறக்குறைய 40 விழுக்காடு மருத்துவமனைகள் மற்றும் நல வசதிகள் பகுதியளவு அல்லது முழுமையாக செயல்படவில்லை என்றும், ஏறத்தாழ 1 கோடியே 36 இலட்சம் மக்களுக்கு தண்ணீர், உடல்நலம் மற்றும் நலப்பணிகளும், 37 இலட்சம் குழந்தைகள் உட்பட 57  இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து உதவியும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மோதல்களுக்கு மத்தியில் வளர்ந்துள்ளனர் என்றும், 75 இலட்சக் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும், 64 இலட்சக் குழந்தைகளுக்கு அவசர பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுகின்றன என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சிரியாவில் போர் முடிந்தாலும் அங்கே போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் மக்கள் மீது மற்றொரு போரை தொடுத்துள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளான போர் மற்றும் கலக வன்முறைகளால் உலகின் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலையானது உண்மையில் வெட்கக்கேடான விடயம். அதிலும், தங்களுக்கென குரல் எழுப்பமுடியாத குழந்தைகளை பாதிக்கவிடுவது மனித குலத்திற்கு பெரும் இழுக்கு. இன்றய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பது நாடறிந்த கூற்று. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் என்பதே நம் விண்ணப்பம். ஆனால் மனிதனின் சுயநலக் கூற்றுக்குள் இந்த வேண்டுகோள் கருகிவிடுகிறது என்பதைத்தான் கண்டுவருகிறோம்.  

குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்று கொள்வார்கள், நமக்கு நிறைய கற்றுத் தருவார்கள். ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மனக் காயங்களுக்கு மருந்திடும். எனவே, நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும். ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால், சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அதுதான். ‘குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி நடைபோடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜனவரி 2025, 15:28