ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா: ஞானிகளின் வழியா? ஏரோதின் வழியா?
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 60:1-6 II. எபே 3:2-3a ,5-6 III. மத் 2:1-12)
இன்று நமது அன்னையாம் திருஅவை திருக்காட்சிப் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. கடவுள் தன்னை உலக மக்கள் அனைவருக்கும் மீட்பராக வெளிப்படுத்திய இந்நாளைத்தான் நாம் திருக்காட்சிப் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். தொடக்ககால கிறிஸ்தவர்கள் இந்தத் திருக்காட்சிப் பெருவிழாவை நான்கு வகையான வெளிப்பாடுகளாக நினைவுகூர்ந்தனர். முதலாவது, பெத்லகேமில் இயேசு ஏழையரான இடையர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியது, இரண்டாவதாக, கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்தியது, மூன்றாவதாக, தனது முப்பதாவது வயதில் யோர்தானில் திருமுழுக்குப் பெற்று மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியது, நான்காவதாக, கானாவில் நிகழ்ந்த திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியபோது தன்னை வெளிப்படுத்தியது. குறிப்பாக, பிற இனத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய தொடக்ககால கிறிஸ்தவர்கள், இயேசு தன்னை வெளிப்படுத்திய இந்த மூன்று ஞானிகளையும் யூதரல்லாத பிற இனத்தாரின் பிரதிநிதிகளாகக் கண்டு மகிழ்ந்தனர். ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரில் மத்தேயு மட்டும்தான் இந்த நிகழ்வு குறித்துக் குறிப்பிடுகின்றார் என்பதைப் பார்க்கும்போது இந்நிகழ்வின் வழியாக சில முக்கியமான கருத்துக்களை அவர் நமக்குக் கூறவருகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடும் இந்த ஞானிகள் மூவரும் பெர்சிய மதத்தைச் சேர்ந்த குருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்துடன், வானவில் தெரிந்த இவர்கள் விண்மீன்களின் போக்கைக் கணிக்கத் தெரிந்தவர்களாகவும், கனவுகளுக்கு விளக்கம் சொல்லத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் இவர்கள் மூவரும் வானில் வெளிப்பட்ட விண்மீனைப் பின்பற்றி குழந்தை இயேசுவைத் தேடி வருகின்றனர். மேலும் பிந்தைய மரபில் இவர்கள் அரசர்களாகவும் கருதப்பட்டனர். இதன் காரணமாகத்தான் இவர்களை மூன்று அரசர்கள் என்றும் இப்பெருவிழாவை மூன்று அரசர்கள் விழா என்றும் அழைக்கின்றோம்.
கீழ்த்திசை ஞானிகள் மூவரின் வருகை
குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த இந்த ஞானிகளின் எண்ணிக்கையைக் குறித்துப் பல்வேறு கருத்துக்களும் நிலவுகின்றன. ஒருசிலர் இவர்களை இரண்டுபேர் என்றும், வேறு சிலர் நான்கு பேர் என்றும், இன்னும் சிலர் பன்னிரெண்டு பேர் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் நம் திருஅவையின் பாரம்பரியத்தில் இவர்கள் மொத்தம் மூன்று பேர் என்றுதான் சொல்லப்படுகின்றது. குழந்தை இயேசுவைக் கண்டுகொண்ட அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் பொருட்டு அவருக்கு மூன்று பரிசுகளை வழங்கியதன் வழியாக, அவர்கள் மூன்று பேராகத்தான் இருந்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் மூவருக்கும் பலவிதமான பெயர்கள் வழங்கப்பட்டாலும் மேற்கத்திய திருஅவையின் பாரம்பரியத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் பல்தசார், மெல்கியோர் மற்றும் கஸ்பார். இவர்களில் கஸ்பார் கறுப்பு நிறத்தில் இருந்ததாகவும் பெரிய தாடியைக் கொண்டிருந்ததாகவும் காட்டப்படுகிறார். மெல்கியோர் தலையில் நரைத்த முடியும் நீண்ட தாடியும் கொண்டவராகவும், கஸ்பார் இளைஞர் மற்றும் செந்நிறம் கொண்டவராக முகத்தில் தாடி எதுவுமில்லாதவராகவும் காட்டப்படுகிறார். மேலும் மெல்கியோர் பெர்சிய நாட்டையும், கஸ்பார் இந்திய நாட்டையும், பல்தசார் அரேபிய நாட்டையும் சேர்ந்தவர்களாகக் காட்டப்படுகின்றனர். இதிலும்கூட சில வேறுபாடுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. மிகவும் சிறப்பாக, இம்மூவரும் வெவ்வேறு நாடுகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள், மற்றும் மொழிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது, கடவுள் வேறுபாடுகளைக் கடந்து தனது உருவிலும் சாயலிலும் படைத்த மனிதரை அன்புகூர்கிறார் மற்றும் மீட்கிறார் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைக் தேடிவந்தனர் என்பதைப் பார்க்கும்போது பழைய ஏற்பாட்டில் மெசியாவின் வருகையைப் பற்றி விளக்கும் பகுதிகள் நம் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக, இன்றைய முதல் வாசகத்தில், "எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்" என்று சொல்லப்படுகின்றது. மேலும் "தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்" (காண்க. திபா 72:10-11) என்று திருப்பாடலின் ஆசிரியரும் உரைக்கின்றார். மோசே இஸ்ரயேல் மக்களை வழிநடத்திச் சென்று யோர்தானுக்கு அக்கரையில் எரிக்கோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளியில் இருந்தபோது, மோவாபின் அரசராகிய பாலாக்கின் விண்ணப்பத்திற்கு இணங்கி இஸ்ரயேலரைச் சபிப்பதற்காக வந்த பிலயாம் என்கிற இஸ்ரேயரல்லாத குறிசொல்வோன், இறைவனின் கட்டளையின் பேரில் இஸ்ரயேலரைச் சபிப்பதற்குப் பதிலாக ஆசிர்வதித்து, 'யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும் இஸ்ரயேலிருந்து செங்கோல் ஒன்று கிளம்பும்' என்று வாழ்த்திப் பேசினார் (காண்க. எண் 24:17). பிலயாம் அறிவித்த இறைவாக்கை நிறைவேற்றும் பொருட்டு ஞானிகள் குழந்தை இயேசுவைக் காண வந்தனர் என்பதையும் நாம் உறுதியாக நம்புவோம்.
ஞானியர் மூவரும் அளித்த பரிசுப்பொருள்கள்
குழந்தை இயேசுவைக் காண வந்த மூன்று அரசர்களும் மூவிதமான காணிக்கைகளைத் தங்களுடன் கொண்டு வருகின்றனர். முதலாவது பொன். இது அரசருக்குரிய அடையாளம். பொன்னிலிருந்து அரசரைப் பிரித்துப் பார்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் இந்த அரசர் பொன்னையும், புகழையும், அதிகாரத்தையும் (பதவி) விரும்பாத பேரரசர். ஆனால் நீதியையும் நேர்மையையும், உண்மையையும் விரும்பும் அரசர். துன்புறும் மக்களுடன் தானும் இணைந்துத் துன்புற்று அவர்களுக்கு விடுதலை தரும் அரசர். இரண்டாவதாக, சாம்பிராணி. இது கடவுளுக்கு உரிய அடையாளம். மிகவும் ஏழ்மையான மற்றும் சாதாரண நிலையில் பிறந்துள்ள அகிலம் முழுதையும் படைத்த இந்தக் கடவுள், எப்போதும் ஆராதனைக்கும், புகழ்ச்சிக்கும் உரியவர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் பின்னணியில்தான் நாம் வழிபாடுகளில் தூபம் பயன்படுத்துகிறோம். மூன்றாவதாக, வெள்ளைப்போளம். இது இறந்தவர்களின் உடலின்மீது பூசப்படும் ஒருவிதமான நறுமணத் தைலத்தைக் குறிக்கின்றது. இயேசுவின் மரணம் மிகவும் கொடியதாக இருக்கும் என்பதையும், பாடுகளை ஏற்று, இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்யும் அவரின் அந்தக் கொடிய மரணத்திலிருந்துதான் உலக மாந்தர் அனைவரும் மீட்புப் பெறுவர் என்பதை இது அடையாளப்படுத்துகிறது.
இயேசு அனைத்து மக்களுக்கும் மீட்பளிப்பவர்
இந்தத் திருகாட்சிப் பெருவிழா என்பது, வேறுபாடுகளற்ற முறையில் அனைத்து மக்களுக்கும் இயேசு அளிக்கவிருக்கும் மீட்பை காட்சிப்படுத்துகிறது என்பதைத் தொடக்கத்தில் நாம் கண்டோம். இயேசு தனது பணிவாழ்வு முழுவதும் வழங்கிய போதனைகள், படிப்பினைகள் மற்றும் அருளடையாளங்கள் வழியாக, "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்பதை மக்களுக்கும் யூதத் தலைவர்களுக்கும் தெளிவுபடக் கூறுகின்றார் (காண்க. மத் 20:28). இன்றைய இரண்டாம் வாசகத்தில், "அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது" என்று கூறும் புனித பவுலடியார், அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்" என்றும் குறிப்பிடுகின்றார். மேலும், "எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்" என்று கடவுள் தரும் அனைத்து மக்களுக்குமான மீட்புக் குறித்து எடுத்துரைக்கும் பவுலடியார், "இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதனைகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல" என்று கூறி இந்த மீட்புச் செய்தியை அறிவிப்பதில் தனக்குரிய தலையாயக் கடமை பற்றியும் தெளிவுபட உரைக்கின்றார்.
இருவகையானத் தேடல்
இன்றைய நற்செய்தியில் ஏரோதின் தேடல், மூன்று ஞானிகளின் தேடல் என இருவகையானத் தேடல்களைக் காண்கின்றோம். பெரிய ஏரோது என்று அழைக்கப்பட்டவன் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான். அப்படியென்றால், இயேசுவின் பிறப்பு தற்போதைய கணிப்பின்படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய ஏரோதுதான் ஆண்டவர் இயேசுவின் காலத்தில் இருந்த கோவிலைக் கட்டியவன். இந்தக் காரணத்திற்காகத்தான் இவன் ஒரு கொடுங்கோலனாக இருந்தபோதும் யூதர்கள் இவன்மீது மதிப்பு வைத்திருந்தனர். ஆனாலும், இயேசு என்னும் மெசியாவால், எங்கே தனது அரசப் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் வாழ்ந்திருக்கிறான். அதனால்தான், 'கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று கூறியதைக் கேட்டதும், ஏரோது அரசன் கலங்கியது மட்டுமன்றி, அவனோடு சேர்ந்து எருசலேம் முழுவதும் கலங்கிற்று என்று மத்தேயு நற்செய்தியாளர் கூறுகின்றார். மேலும் அவன் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தது, குழந்தை இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற தீய எண்ணத்தில்தான். ஆக, ஏரோதின் தேடல் என்பது பாலன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்பதற்கானத் தேடல். இவ்வகையானத் தேடல் எப்போதும் ஆபத்தானது. காரணம், இது மோதல்களையும், கலவரங்களையும், போர்களையும் தோற்றுவிக்கும். அத்துடன் அப்பாவி மக்களும், குழந்தைகளும், பெண்களும் அநியாமாகக் கொல்லப்படுவார்கள். அதனால்தான் தன்னிடம் ஞானிகள் திரும்பி வராதத்தைக் கண்டதும், அவர்களிடம் தான் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான் என்பதையும் மத்தேயு பதிவு செய்கின்றார். இன்று இஸ்ரேல் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருப்பதும் ஏரோது கொண்டிருந்த தேடல்தான். அதாவது, பதவிவெறிக்கான ஒரு போர் இது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி நிலவரப்படி, இஸ்ரேல்–ஹமாஸ் போர்களில் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதில் 44,786 பாலஸ்தீனியர்கள் மற்றும் 1,706 இஸ்ரேலியர்கள் அடங்குவர் என்று ஐ.நா.வின் அறிக்கைத் தெரிவிக்கின்றது. மேலும் 141 முதல் 156 பத்திரிகையாளர்களும் மற்றும் ஊடகப் பணியாளர்களும், 120 கல்வியாளர்கள் மற்றும் 224-க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அண்மை கிழக்கின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையைச் (UNRWA) சேர்ந்த 179 ஊழியர்களும் இதில் அடங்குவர் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் நாம் உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் போரையும் இணைத்துக்கொள்ளலாம். இப்போரில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் அறிக்கைத் தெரிவிக்கின்றது. ஏறக்குறைய 34 நாடுகள் போரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் புலப்படுத்துகின்றது. ஆக, இன்றைய உலகின் பல தலைவர்கள் ஏரோதின் வழியில்தான் பயணிக்க விரும்புகின்றனர்.
ஆனால் மூன்று ஞானிகளின் தேடல் என்பது இறைவனுக்கானத் தேடல். இது அமைதியையும் சகோதரத்துவத்தையும், சமூக நீதியையும் உள்ளடக்கிய ஒரு தேடல். இது இறையாட்சிக்கான ஒரு தேடல். இங்கே எவ்விதமான மோதல்களுக்கும் பகைமை உணர்வுகளுக்கும் இடமில்லை. நாடு, இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என எவ்விதப் பிரிவினைக்கும் இடமில்லை. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்று தாயுமானவர் சொன்னதன் பொருளும் இதுதான். இங்கே இன்பம் என்பது ஒரு பதட்டமில்லாத நிலை. அதாவது, பதட்டம் என்பது பொய், களவு, சூது, கொலை, கொள்ளை, மோதல் போர், வன்முறை ஆகியவற்றால் குறிக்கப்படுவது என்று பொருளாகிறது. பதட்டமில்லா நிலைதான் இன்பம் என்று கூறும்போது, இன்பம் பேணுவோர் பதட்டமேற்படுத்தும் கொடுஞ்செயலை செய்யமாட்டார்கள். பதட்டம் ஏற்படுத்தும் கொடுஞ்செயல் ஏதுமில்லை என்ற நிலை தோன்றும் போது அங்கே கெட்டவர் எவரும் இருக்க மாட்டார்கள். அங்கே நிலையான நீடித்த அமைதி நிலவும். ஆக, 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்று தாயுமானவர் சொல்லியதன் வழியாக, எல்லோரும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும், கெட்டவராக எவரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை முன்னெடுத்து, எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்திருக்கிறார். மனிதர்களே இவ்வாறு நினைக்கும்போது, நம்மை படைத்த கடவுள் நினைக்க மாட்டாரா? எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற நம் கடவுளின் எண்ணம்தான் இன்று நாம் கொண்டாடும் இத்திருக்காட்சிப் பெருவிழாவில் வெளிப்படுகிறது. இத்தகைய எண்ணத்தை நாமும் கொண்டு எல்லோரும் மீட்படைய, எல்லோரும் இன்புற்றிருக்க, எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ, எல்லோரும் இறையாட்சியை உரிமையாக்கொள்ள உழைப்போம். நாம் ஒவ்வொருவரும் பிறரின் நல்வாழ்விற்கு வழிகாட்டும் விண்மீன்களாய்த் திகழ்வோம். போர்களையும் மோதல்களையும் பிரிவினைகளையும் விரும்பும் ஏரோதுக்களின் பக்கம் செல்லாமல், அன்பையும், அமைதியையும், ஒன்றிப்பையும், சகோதரத்துவத்தையும், நல்வாழ்வையும் விரும்பி வேறுபக்கமாகச் சென்ற ஞானிகளின் தூய வழியில் நாமும் செல்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்