நீதி கேட்டு இலங்கை கத்தோலிக்கர் அமைதி ஊர்வலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியிலுள்ள பொறளை அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்குள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெடிகுண்டு வைத்தவர்களை கைது செய்யத் தவறியதற்காகவும், அதற்காக அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தியதற்காகவும், தவறான பாதையில் வழக்கை எடுத்துச் சென்றதற்காகவும் எதிர்ப்புத் தெரிவித்து கத்தோலிக்க அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
கொழும்புத் தெருக்களில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில், ‘மூன்றாண்டுகளாக ஏன் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லவில்லை’ என்ற கேள்விகள் பதாகைகளில் எழுதப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு திருவிழா ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளை திசை திருப்பவே 2022ஆம் ஆண்டில் பொறளை அனைத்துப் புனிதர்கள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது என சிலர் ஏற்கனவே தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று ஆலயங்களிலும் மூன்று சொகுசு விடுதிகளிலும் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர், ஏறக்குறைய 500 பேர் காயமுற்றனர். இதில் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த காணொளிக் காமிராவில் ஒருவர் அந்த ஆலயத்திற்குள் வெடிகுண்டை வைத்துவிட்டுச் செல்வது தெரிகின்றபோதிலும், அவரை அடையாளம் கண்டு கைதுச் செய்ய காவல்துறை தவறியதுடன், கோவிலை வெடிகுண்டு தாக்குதலிலிருந்து காப்பாற்றிய கோவில் அலுவலகரை கைது செய்து கொடுமைப்படுத்தியது மனித உரிமை மீறலாகும் என்றார் இலங்கை ஆயர்பேரவையின் சமூகத்தொடர்புத் துறையின் தேசிய இயக்குனர், அருள்பணி Jude Chrisantha.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்